தமிழர்களின் கல்விமான்களை கொன்றொழித்த கட்சிக்கு வாக்களிக்காமல் தமிழர்களின் எதிர்காலத்திற்காக போராடும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்கவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டு.ஊடக அமையத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், “வடகிழக்கில் தபால்மூல வாக்களிப்புகள் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது. 95வீதத்திற்கும் மேற்பட்ட அரச உத்தியோகத்தர்கள் கூட்டமைப்புக்கு வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது மகிழ்ச்சியான விடயமாகும்.
சில அரச அதிகாரிகள் தங்களது அரசியல் உரிமைகளை இழந்த நிலையில் இருப்பதை காணமுடிகின்றது.ஆளும் கட்சியை சேர்ந்த ஒரு சில அரச உத்தியோகத்தர்கள் இன்று தங்களது அரசியல் பணிகளில் உற்சாகமாக ஈடுபட்டதையும் காணமுடிந்தது. சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஒரு சிலர் இன்று அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டதை காணமுடிந்தது.
இதேபோன்று கூட்டமைப்பினை ஆதரிக்கும் உத்தியோகத்தர்களுக்கு சில உயர் அரச அதிகாரிகளினால் அச்சுறுத்தல் விடுத்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது. அவர்களை பதவிகளை பாதுகாப்பதற்கும் பதவி உயர்வுகளுக்காகவும் சில அரச ஊழியர்களை அச்சுறுத்தும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
தமிழ் தேசிய கூட்டமைப்பினை ஆதரிக்கும் உத்தியோகத்தர்களுக்கு அரசியல் உரிமையும் மறுக்கப்படும் நிலையேற்பட்டுள்ளது. இன்று வாக்களிப்பில் ஈடுபட்ட சில தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவான உத்தியோகத்தர்களின் வாக்குச்சீட்டுகளை எடுத்து பார்க்கும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
அரசாங்க உத்தியோகத்தர்களின் வாக்களிப்பு வீதம் அதிகமாக காணப்படுமானால் அது மக்கள் மத்தியிலும் வாக்களிப்பு வீதத்தினை கூட்டும். தமிழ் மக்கள் இம்முறை அதிகளவில் கூட்டமைப்புக்கு வாக்களிப்பார்கள். நான்கு நாடாளுமன்ற உறுப்பினர் வரக்கூடும் என்ற சந்தேகம் இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நான்கு உறுப்பினர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பில் சார்பில் தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் அதிகமாகவுள்ளது.
மக்கள் சிந்திக்கவேண்டும் மட்டக்களப்பில் இருந்து திருகோணமலைக்கு செல்லும் பாதையும் மட்டக்களப்பில் இருந்து கல்முனைக்கு செல்லும் பாதையும் ஒரே தரத்தில் இருக்கவேண்டும்.
ஆனால் திருகோணமலைக்கு செல்லும் வீதி மட்டும் ஏன் கழண்டு உதிர்ந்துபோயுள்ளது என்பதை மக்கள் சிந்திக்கவேண்டும். திருகோணமலை வீதியின் ஆறு இஞ்சி காபட் வீதி எங்கு சென்றது என்ற சந்தேகம் அனைவருக்கும் உள்ளது.
அதற்காக ஒதுக்கப்பட்ட காசு எங்கு சென்றது.அந்தவேளையில் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்தது யார் என்பதையெல்லாம் பார்க்கவேண்டும்” என கூறினார்.