காட்டு யானைகள் அட்டகாசம் – அச்சத்துடன் வாழும் கிராம மக்கள்!

0

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுற்குட்பட்ட சின்னத்தம்பனை கிராமத்தில் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இன்று அதிகாலை சின்னத்தம்பனை கிராமத்தில் மக்கள் குடியிருப்புகளுக்குள் பிரவேசித்த யானைகள் பயன்தரும் தென்னம்பிள்ளைகளை முறித்து சேதப்படுத்தியுள்ளது. அதேவேளை வீடுகளையும் சேதப்படுத்தியுள்ளன.

வவுனியா மாவட்டத்தில் பாரம்பரிய கிராமங்களில் ஒன்றான சின்னத்தம்பனை விவசாயக் கிராமத்தில் கடந்த பல வருடங்களாக காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ள நிலையில் தற்போது பகல் நேரங்களிலும் யானைகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து பயன்தரும் மரங்களையும் விவசாய நிலங்களையும் சேதப்படுத்தி வருகின்றது.

இந் நிலையில் கிராமத்தை யானைகள் ஆக்கிரமித்து வருவதால் தாம் தமது சொந்த கிராமத்தில் இருந்து வேறு இடங்களுக்கு இடம்பெயர வேண்டிய துர்ப்பாக்கியமான நிலை உருவாகி வருவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தாம் நிரந்தரமாக விவசாயம் செய்து நின்மதியாக வாழ்வதற்கு தமது கிராமத்தை சுற்றி யானைகளுக்கான மின்சாரவேலியை அமைத்து தருமாறு மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.