காத்தான்குடியில் இன்றும் பிரிவினைவாத வஹாப் சித்தாந்தம் உள்ளது

0

சஹ்ரான் ஹசீம் உயிரிந்திருந்தாலும் காத்தான்குடியில் இன்றும் பிரிவினைவாத வஹாப் சித்தாந்தம் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் பெருமளவில் கடைப்பிடிக்கப்படுவதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த ஆணைக்குழு முன் சாட்சி வழங்கிய காத்தான்குடி பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் இதனை தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதேசத்தில் சுமார் 45 முதல் 50 சூஃபி அல்லாத பள்ளிவாசல்கள் உள்ளதாகவும், அதில் வஹாப் கொள்கையை கடைப்பிடிக்கும் 10 முதல் 15 பள்ளிவாசல்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

அந்தந்த வஹாப் கொள்கையுடைய பள்ளிவாசல்களில் சுமார் 15,000 உறுப்பினர்கள் வரையில் உள்ளதாகவும் அவர் கூறினார். 

இந்திய மௌலவிகள் போதனைகளுக்காக காத்தான்குடி பகுதிக்கு வந்ததாகவும் அதில் தமிழக தவுப்பிக் ஜமாத் அமைப்பின் தலைவர் என தெரிவிக்கப்படும் செயினுலப்தீனும் கலந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தேசிய தவுப்பிக் ஜமாத் அமைப்பு 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையில் ஒழிக்கப்பட்டாலும், ஸ்ரீலங்கா தவுப்பிக் ஜமாத், சிலோன் தவுப்பிக் ஜமாத் ஆகிய அமைப்புகள் இன்றும் பகிரங்கமாக பிரிவினைவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். 

காத்தான்குடியில் அரபு மற்றும் மதரஸா பாடசாலைகளில் வஹாபிசம் கற்பிக்கப்படுவதாகவும், வஹாபிசவாத பிரிவினைவாத பள்ளிவாசல்கள் நாட்டில் இன்றும் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

2011 ஆம் ஆண்டு முதல் காத்தான்குடியில் அரபு மொழியில் பெயர் பலகைகள் நகர சபையால் வைக்கப்பட்டதாக தெரிவித்த அவர், அந்த நகரசபையின் தலைவராக வஹாபிசவாத சித்தாந்தத்தை கொண்ட ´அஸ்வர்´ என்ற நபர் இன்னும் பதவியில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

அதேபோல் காத்தான்குடி பிள்ளைகள் 6 ஆம் மற்றும் 7 ஆம் வகுப்புகளுக்குப் பின்னர் அரச பாடசாலைகளுக்கு செல்வதில்லை என்றும் மாறாக அவர்கள் மதரசா மற்றும் அரபு பாடசாலைகளில் கற்பதாகவும் அவர் ஆணைக்குழுவில் மேலும் தெரிவித்தார்.