காத்தான்குடியில் முடக்கப்பட்ட 9 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை விடுவிக்க பரிந்துரை

0

தனிமைப்படுத்தப்பட்ட காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள 9 கிராம உத்தியோகத்தர் பிரிவை விடுவிப்பதற்கு இன்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 31 ம் திகதி காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு சிவப்பு வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டது.

இதன் பின்னர் இந்த பிரதேசத்தில் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டு மதிப்பிடு செய்யப்பட்டு ஜனவரி 31 ம் திகதி 8 கிராம உத்தியோகத்தர் பிரிவு விடுவிக்கப்பட்டதுடன் தொடர்ந்து 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கப்பட்டன.

இதனையடுத்து இன்று கோவிட்-19 தொற்று ஆபத்து தொடர்பாக மதிப்பிடு செய்யப்பட்டு ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவு தவிர்ந்த ஏனைய 9 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை விடுவிக்கச் சுகாதார திணைக்கள நாயகத்திற்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரை 243 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன், இவர்களில் 217 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

23 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றதுடன், இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.