காராமுனை பகுதியில் சிங்கள மக்களை குடியேற்ற முன்னெடுக்கும் செயற்பாட்டுக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு

0

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் மாங்கேணி கிராம சேவையாளர் பிரிவில் காராமுனை பகுதியில் சிங்கள மக்களை குடியேற்ற முன்னெடுக்கும் செயற்பாட்டுக்கு எதிராக அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் மாங்கேணி கிராம சேவையாளர் பிரிவில் பகுதியில் காராமுனை பகுதியில் 1982ஆம் ஆண்டுக்கு முன்பாக சிங்கள மக்கள் குடியிருந்ததாக கூறி இன்று அவர்களுக்கான நடமாடும் சேவையொன்று புனானையில் உள்ள வனஇலகா திணைக்களத்தில் நடைபெற்றது.

இந்த நடமாடும் சேவையினை மத்திய காணி ஆணையாளர் காணி ஆணையாளர் ஜி.கீர்த்தி கமகே மற்றும் கிழக்கு மாகாண உதவி காணி ஆணையாளர் ஜி.ரவிராஜன் ஆகியோர் இணைந்து நடாத்தியிருந்தனர்.

இந்த நடமாடும் சேவையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக காணி திணைக்கள மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் காணி உதவி பணிப்பாளர் உட்பட பலர் இணைந்திருந்தனர்.

இதன்போது குறித்த பகுதியில் 1982ஆம் ஆண்டுக்கு முன்பாக வசித்ததாக தெரிவிக்கப்படும் சிங்கள மக்களின் ஆவனங்கள் பரிசோதிக்கப்பட்டு அவர்களுக்கான காணிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் அப்பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தலைமையிலான குழுவினர், குறித்த செயற்பாடுகள் தொடர்பில் தமது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்தனர்.

இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை தவிசாளர் எஸ்.சர்வானந்தன், பிரதேசசபை, மாநகரசபை உறுப்பினர்கள், பொதுமகக்ள் என பலர் குறித்த நடமாடும் சேவை நடைபெறும் பகுதிக்கு சென்று தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

இதன்போது அப்பகுதிக்கு பெருளவான பொலிஸார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்திருந்ததுடன் குறித்த காணி நடமாடும்சேவைக்கும் சிங்கள குடியேற்றத்திற்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து குறித்த பகுதியில் எதுவித குடியேற்றமும் செய்யப்படாது எனவும் காணி ஆவணங்களை மட்டும் பரிசோதனைகள் செய்யப்பட்டு பின்னர் அவர்களுக்கு வேறு இடங்களில் காணி வழங்க நடவடிக்கையெடுக்கப்படும் என காணி ஆணையாளரினால் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிடம் உறுதியளித்தார்.

அதனையடுத்து காராமுனைக்கு சிங்கள மக்களும் காணி ஆணையாளரும் சென்று அங்கு காணிகளை பார்வையிட்ட நிலையில் அதற்கு எதிராக அப்பகுதி மக்களும் பாராளுமன்ற உறுப்பினரும் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்ததுடன் காணி ஆணையாளரை அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு கோரி ஆர்ப்பாட்டமும் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து காணி ஆணையாளர் மற்றும் உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் அங்கிருந்து திரும்பிச்சென்றனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான சந்திரகாந்தன் மற்றும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்தேரன் போன்றவர்கள் இவ்வாறான சம்பவங்கள் நடக்கும்போது இவர்கள் கொழும்பிலும் வெளிநாடுகளுக்கும் சென்று ஒழிந்துகொள்வதாகவும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

1976ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் எங்களுக்கு விவசாயம் மேற்கொள்வதற்கு ஐந்து ஏக்கர் காணியும் தாங்கள் குடியிருப்பதற்கு ஒரு ஏக்கருமாக மொத்தமாக ஆறு ஏக்கர் ஒரு குடும்பத்திற்காக 190 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருந்ததாகவும் 1983ம் ஆண்டு ஜூலை கலவரத்தின் காரணமாக நாங்கள் இடம் பெயர்ந்து நாட்டின் பல பாகங்களிலும் வாழ்ந்து வந்ததாகவும் யுத்தம் முடிந்த பின்னர் தொடக்கம் நாங்கள் எங்களுக்கான காணியை வழங்குமாறு அரச திணைக்களங்களுக்கு முறையிட்டதன் பயனாக இன்று 21.10.2021 (வியாழக்கிழமை) எங்களது காணிகளை அடையாளப்படுத்துமாறு காணி திணைக்களத்தினால் அழைக்கப்பட்டதற்கிணங்க தாங்கள் இன்று வருகை தந்ததாகவும் எங்களது காணிகள் வேறு நபர்களால் பராமரிக்கப்பட்டு வருமாக இருந்தால் எங்களுக்கு மாற்றுக் காணி வழங்குமாறும் வருகை தந்த சிங்கள மக்கள் தெரிவித்தனர்.

“வாகih பிரதேசம் தமிழ் பேசும் மக்களின் பிரதேசம் இங்கு அரசாங்கத்தினால் திட்டமிட்டு குடியேற்றம் செய்ய நடவடிக்கைகள் நடக்கின்றன அதற்கு நாங்கள் ஒரு போதும் அனுமதி வழங்க மாட்டோம் இன்று தமிழர்களின் காணிகள் பரிபோகும் நிலையில் மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதாக கூறும் இராஜாங்க அமைச்சரோ கிழக்கை மீட்கப் போகிறோம் என்று தெரிவிக்கும் அபிவிருத்தி குழு தலைவரோ மாவட்டத்தில் முஸ்லீம்களின் ஒரே பிரதிநிதியாக இருப்பவரையும் காணவில்லை மக்களுக்கு பிரச்சினை வரும்போது பிரச்சினையை தீர்த்து வைக்காதவர்கள்தான் இன்று அபிவிருத்தி தொடர்பில் பேசுவதாக”மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.