கிண்ணியாவில் 6பேருக்கு கொரோனா!- 2 கிராம சேவகர் பிரிவுகளை முடக்க நடவடிக்கை

0

கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து கிண்ணியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், உயர்மட்ட மாநாடும், ஊடகச் சந்திப்பும் பிரதேச செயலாளர் எம்.எச்.முஹமட் கனி தலைமையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

குறித்த ஊடக சந்திப்பிலேயே கிண்ணியா- மாஞ்சோலை மற்றும் அண்ணல் நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 6பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது .

மாஞ்சோலை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கும், அண்ணல் நகரில் மற்றொருவருமாக 6பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில்  மூவர்  பாடசாலை மாணவர்களாவர்.

எனவே, இந்த இரண்டு கிராம சேவகர் பிரிவுகளையும் முடக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி, கை கழுவுதல் போன்ற விடயங்களை மிகவும் காத்திரமாக கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

திருகோணமலை, கிண்ணியா வலயக்கல்வி அலுவலகத்திலுள்ள 66பாடசாலைகளையும் மூடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் முடக்கப்பட்ட இடங்கள், தொடர்ச்சியாக இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக கிண்ணியா வலயக் கல்விப் கல்விப் பணிப்பாளர் ஏ.நசூவர்கான் தெரிவித்தார்.

இதேவேளை பொதுச்சந்தைகள் மற்றும் பொது இடங்களையும் மூடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்

மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது .