திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பொலிஸ் பிரிவு குறிஞ்சாங்கேணி களப்பில் நேற்று (23) செவ்வாய்க்கிழமை படகுபாதை கவிழ்ந்து சிறுவர்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 3 மற்றும் 8 வயதுக்கிடைப்பட்ட சிறுவர்கள் நால்வர் , 32 வயதுடைய பெண் மற்றும் 70 வயதுடைய முதியவர் ஒருவர் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
இவர்கள் அனைவரும் குறிஞ்சாங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். அத்தோடு காயமடைந்த 18 பேர் கிண்ணியா, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையிலேயே குறித்த படகு பாலத்தின் உரிமையாளர், படகு பாலத்தை செலுத்துபவர் ஆகியோர் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையானதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து குறித்த படகு பாதையில் பயண கட்டணம் அறவிடும் நபரும் கிண்ணியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.