உலகளாவிய கொரோனா தொற்றை முடிவுக்கு கொண்டுவருமென கருதக்கூடிய ‘பைசர்’ மற்றும் ‘பயோஎன்ரெக்’ மருந்து உற்பத்திநிறுவனங்கள் உருவாக்கிய தடுப்பூசி இன்னும் மூன்று வாரங்களில் பயன்பாட்டுக்கு வரும் என்ற செய்தி இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் புலம்பெயர் தமிழமக்கள் வாழும் நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியம் தனது உறுப்பு நாடுகளுக்காக 300 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்யப்போவதாக இன்று அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்த தடுப்பூசியை இயலுமான வரை விரைவாக வழங்க பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவை தயாராக உள்ளதாக பிரித்தானிய சுகாதார அமைச்சர் மாற் ஹான்கொக் இன்று தெரிவித்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் கொரானா தொற்றுக்களின் மொத்த எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி ஐந்து கோடியை கடந்துள்ள நிலையிலும் தொற்றாளர்களில் 12,55,803 பேர் மரணமடைந்துள்ள துன்பியல் பதிவாகியுள்ளது
அமெரிக்காவில் மட்டும் ஒரு கோடி மக்களுக்கு மேல் தொற்றுகள் பதிவாகியுள்ளன.
இத்தாலியில் மீண்டும் தொற்று நிலைமை கட்டுப்பாடற்று கடந்து செல்லும் பின்னணயில் ஐரோப்பாவில் 3 05,700 மரணங்கள் இதுவரை பதிவாகியுள்ளன.
இந்த நிலையில் உலகமாந்தருக்குரிய கிறிஸ்மஸ் பரிசாக இன்னும் மூன்று வாரங்களில் புதிய தடுப்பூசி கிட்டும் என்ற செய்தி இன்று வெளியிடப்பட்டுள்ளது.
உலகின் அங்கீகாரத்தைப்பெறக்கூடியதாக கருதப்படும் இந்த முதலாவது கொரோனா தடுப்பூசி அதனை ஏற்றும் மக்களிடம் 90 சதவீதத்துக்கு மேல் வெற்றிகரமாக பலனளிப்பதாக அதன் உற்பத்தியாளர்களான பைசர் மற்றும் பயோஎன்ரெக் நிறுவனங்களால் அறிவிக்கப்பட்டிருந்தது
ஐரோப்பிய ஒன்றியம் தனது உறுப்பு நாடுகளில் உள்ள மக்களுக்காக 300 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளது
இந்த நிலையில் புதிய தடுப்பூசி கிறிஸ்மசுக்கு முன்னர் கிடைப்பது முற்றிலும் சாத்தியமானது என அறிவித்துள்ள பிரித்தானிய சுகாதார அமைச்சர் ஹான்கொக், இதனை முடிந்தவரை விரைவாக வழங்க பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையான NHS தயாராக உள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அவர் மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஆர்.என்.ஏ தடுப்பூசி என்று அழைக்கப்படும் இந்த தடுப்பூசி தற்போது பரிசோதனையின் இறுதி கட்டத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது