நல்லாட்சியென்ற பெயரில் சொல்லாட்சி நடாத்திய காலத்தில் கிழக்கில் ஒரு பாலம் கூட அமைக்கப்படவில்லையெனவும் கிழக்கு மாகாணத்தில் மகிந்த ராஜபக்ஸவின் காலத்திலேயே அதிக பாலங்கள் கட்டப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு பாலத்தினை புனரமைப்பது குறித்து நேரில் சென்று ஆராயும் வகையில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக முக்கிய பாலமாகவும் மிகவும் பழமைவாய்ந்த பாலங்களில் ஒன்றாகவும் காணப்படும் இந்த பாலமானது மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
குறித்த பாலத்தின் நடுப்பகுதியில் ஏற்பட்ட உடைவு காரணமாக ஒரு பக்க போக்குவரத்து மட்டுமே நடைபெற்றுவரும் நிலையில் குறித்த பாலத்தினை புனரமைத்துத் தருமாறு கடந்த காலத்தில் பல்வேறு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில் இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து குறித்த பாலத்தினை புனரமைக்கும் பணிகள் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்.
இதற்கான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுத் திட்ட வரைபுகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், 165மீற்றர் நீளமும் 10.5அகலமும் கொண்ட குறித்த பாலத்தினை புனரமைப்பதற்காக 1000மில்லியன் ரூபா தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த பாலத்தினை விரைவில் புனரமைத்து மக்களின் பாவனைக்கு வழங்கும் வகையில் இன்று இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் அப்பகுதிக்கு விஜயம் செய்து அது தொடர்பில் கலந்துரையாடினார்.
இந்த விஜயத்தில் மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் மற்றும் நிறைவேற்று பொறியியலாளர் ஆகியோர் இணைந்திருந்தனர்.
கடந்த நல்லாட்சிக்காலத்தில் பல பாலங்களுக்குக் கற்கள் நடப்பட்ட நிலையில் எந்த பாலத்தின் கட்டுமானப்பணிகளும் முன்னெடுக்கப்படவில்லையென இதன்போது இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கவும் நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது அவர் தெரிவித்துள்ளார்.