கிழக்கில் வேகமாக பரவும் கோவிட் தொற்றின் மூன்றாவது அலை – வைத்தியர் ஏ.ஆர்.எம். தௌபீக்

0

கிழக்கு மாகாணத்தில் கோவிட் தொற்றின் மூன்றாவது அலை மிக வேகமாகப் பரவி வருவதால் மக்கள் அவதானமாக இருக்குமாறும், வெளிமாவட்டங்களிலிருந்து கிழக்கு மாகாணத்திற்கு வருபவர்கள் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி வீடுகளில் சுயதனிமைப்படுத்தலில் இருக்குமாறும், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர்.எம். தௌபீக் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணித்தியாலத்தில் கிழக்கு மாகாணத்தில் 77 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதோடு, இதில் அம்பாறை – தெஹியத்தகண்டி சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 23 பேர் கூடுதலான தொற்றாளர்களாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

திருகோணமலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 1,804 பேரும், மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 1,229 பேரும், கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 1,520 பேரும், அம்பாறை சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 959 பேருமாக கிழக்கு மாகாணத்தில் 5,512 பேருக்கு கோவிட் தொற்று கண்டறியப்பட்டுள்ளது .

தெஹியத்தக்கண்டி, திருகோணமலை, உப்புவெளி, மட்டக்களப்பு, உகன, களுவாங்சிக்குடி, கிண்ணியா ஆகிய 07 வைத்தியதிகாரி பிரிவுகள் மிக அவதானத்திற்குரிய வலயங்களாகக் காணப்படுவதால் மக்கள் அவதானமாக இருக்கவும்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 29,110 பேருக்கும், அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 10,775 பேருக்கும், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 22,838 பேருக்கும், திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 21,809 பேருமாக மொத்தம் 84 ஆயிரத்து 532 பேருக்கு பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கோவிட் தொற்றின் மூன்றாவது அலையில் திருகோணமலை மாவட்டத்தில் 940 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 248 பேரும், அம்பாறையில் 614 பேரும், கல்முனையில் 37 பேருமாக மொத்தம் 1,839 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2வது கோவிட் தொற்று அலையில் 26 பேரும், 3வது கோவிட் தொற்று அலையில் 23 பேருமாக மொத்தம் இதுவரையில் கிழக்கு மாகாணத்தில் மொத்தம் 49 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் புதிதாக 1500 படுக்கைகளைக் கொண்ட 04 சிகிச்சை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.