கிழக்கு மாகாணத்தில் நாளுக்கு நாள் கோவிட் – 19 தொற்று அதிகரித்து வருவதாகக் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அதனடிப்படையில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் குறைவடைந்திருந்த கோவிட் – 19 தொற்றாளர்களின் எண்ணிக்கையில் நவம்பர் மாதத்தில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
ஒக்டோபர் மாதத்தில் சராசரியாகக் கிழமைக்கு 600 தொடக்கம் 650 என நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வந்த நிலையிலும், நவம்பர் இறுதிப் பகுதியில் கிழமைக்கு 1000 கோவிட் – 19 தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.
அம்பாறை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளதாகவும் மாதாந்தம் செய்யப்படும் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகளும் இனங்காணப்படும் நோயாளர்களின் வீதம் அடிப்படையில் ஒப்பிடும் போது செப்டம்பரில் 31வீதமாகவும், ஒக்டோபர் மாதத்தில் 21வீதமாகவும் குறைவடைந்து இருந்தது.
இது நவம்பர் மாதத்தில் மீண்டும் 31வீதமாக அதிகரித்து உள்ளது. டிசம்பர் மாதம் இறுதிக்குள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சர்வதேச நாடுகள் உட்பட எமது நாட்டிலும் ஓமிக்ரோன் வகை கோவிட் வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளது. இது வேகமாகப் பரவக்கூடியது எனவும் இதனுடைய தாக்கத்தின் உடைய வேகமும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய அளவும் மரணங்களின் வேகம் என்பன தொடர்பில் சரியான கணிப்புகள் இதுவரை கூறப்படவில்லை.
எதிர்வரும் காலம் பண்டிகை காலம் என்பதினால் பொது மக்கள் தமக்கு தேவையான பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அடிக்கடி சொல்லப்படுகின்ற முக கவசத்தைச் சரியாக அணிந்து கொள்வதும், சமூக இடைவெளிகளைப் பேணி, அடிக்கடி கைகளை கழுவி தற்பாதுகாப்புகளை எடுத்துக் கொள்வது அவசியமாகும்.
அத்தோடு அனாவசியமான பாதுகாப்பற்ற நெருக்கடியான ஒன்று கூடல்களைத் தவிர்த்துக் கொள்ளுதல் அவசியமாகும். விசேடமாக மரண வீடுகளில், மங்கள திருமண நிகழ்ச்சிகள், சமய நிகழ்ச்சிகள் மற்றும் சமய ஆராதனைகள் என்பவற்றில் ஒன்று கூடுவதும், பண்டிகை காலங்களில் கடைகளில் பொருட்களை வாங்குவதற்காக நெருக்கடியான முறையிலே ஒன்று கூடுவதும் இந்தக் கட்டங்களில் சுகாதார அமைச்சினால் அறிவுறுத்தப்படும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் எம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
மேலும் கோவிட் தடுப்பு மருந்தைத் தவறாமல் பெற்றுக்கொள்வது அவசியமாகும். கிழக்கு மாகாணத்தில் 95 வீதம் 20 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதலாவது தடுப்பு மருந்தும் 85 வீதமானவர்களுக்கு இரண்டாவது கோவிட் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 16 மற்றும் 20 வயதுடையவர்களுக்கு பைசர் தடுப்பூசி 95வீதமானார்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.