கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சாணக்கியனை களமிறக்குமாறு சிறிதரன் ஆலோசனை!

0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக இரா.சாணக்கியனை களமிறக்கும் யோசனை ஒன்றினை நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் முன்வைத்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று (சனிக்கிழமை) வவுனியாவில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, சி.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.ஸ்ரீதரன், இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், அரியநேத்திரன், சிவமோகன், ஞா.சிறிநேசன் ஆகியோர் பங்கேற்றனர்.

அத்துடன், மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், கே.சயந்தன், குருகுலராஜா, சட்டத்தரணி வி.தவராசா, மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சரவணபவன் மற்றும் பல கட்சி முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

இந்தநிலையில் இதன்போதே இரா.சாணக்கியனை களமிறக்கும் யோசனை ஒன்றினை நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் முன்வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடமாகாணசபை தேர்தலில் மாவை சேனாதிராசா களமிறக்கப்பட வேண்டும். கடந்த மாகாணசபை தேர்தலில் அவர் தனது இடத்தை விக்னேஸ்வரனிற்கு விட்டுக் கொடுத்தார். இம்முறை அப்படியான முடிவை எடுக்கக்கூடாது. அவரது தலைமையில் இளைஞர்களை களமிறக்க வேண்டும்.

அத்துடன், கிழக்கு மாகாணசபை தேர்தலில் இரா.சாணக்கியனை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க வேண்டும் எனவும் யோசனை ஒன்றினை சிறிதரன் முன்வைத்துள்ளார். முஸ்லிம் மக்கள் அவரை ஆதரிப்பார்கள் என்பதால், அவரை களமிறக்கி வெற்றியடையலாமென சிறிதரன் குறிப்பிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், இதுகுறித்து இரா.சாணக்கியன் கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை எனவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, அண்மையில் ஆதவன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான “நேருக்கு நேர்“ நிகழ்ச்சியில் சாணக்கியனிடம் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கும் போது, கட்டி தலைமை எடுக்கும் முடிவினை ஏற்றுக்காள்ள தயார் என தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.