கிழக்கை சிங்கள பகுதிகளாக மாற்றுவதே ஜனாதிபதி செயலணியின் நோக்கம் – சம்பந்தன் கடிதம்

0

பௌத்தத்தை ஊக்குவிக்கின்றோம், பாதுகாக்கின்றோம் பேணுகின்றோம் என்ற போர்வையில் அடையாளம் காணப்பட்ட நிலங்களில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்துவதே கிழக்கு மாகாண தொல்பொருள் முகாமைத்துவ செயலணி ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் கிழக்கு மாகாணத்தையும் முடிந்தளவிற்கு வடமாகாணத்தையும் சிங்கள பகுதிகளாக மாற்றுவதும் இதன் நோக்கம் என அக்கட்சியின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ள அவர், கிழக்கு மாகாணம் பல்லின சமூகத்தினர் வாழும் பகுதி என்ற போதிலும் மாகாணத்தின் பெரும்பான்மையான மக்கள் தமிழ் பேசுபவர்கள் என அக்கடிதத்தில்  சுட்டிக்காட்டியுள்ளார்.

செயலணி அதன் கட்டமைப்பில் முற்றுமுழுதாக சிங்களவர்களை கொண்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ள அவர், அந்த செயலணி உருவாக்கப்பட்ட விதம் அது ஒரு சமூகத்தின் நலன்களிற்காக உருவாக்கப்பட்டுள்ளது என்பதை புலப்படுத்துகின்றது என்றும் ஒரு மதத்தின் நலன்களை பாதுகாப்பதற்காக உருவாக்ப்பட்டுள்ளது என்பதையும் புலப்படுத்துகின்றது எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஏன் ஏனைய மாகாணங்கள் கைவிடப்பட்டுள்ளன? ஏன் ஏனைய சமூகங்கள் மதங்கள் கைவிடப்பட்டுள்ளன என்ற கேள்வியை எழுப்புவதும் பொருத்தமாகயிருக்கும் எனவும் சம்பந்தன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்துக்களின் ஆழமான வேர்கள் வடக்கு கிழக்கில் மாத்திரமல்லாமல் நாட்டின் முழுபகுதியிலும் காணப்படுவதால் .இலங்கை தமிழன் இந்து என்ற அடிப்படையில் தனது கரிசனைகள் எழுந்துள்ளன என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கிற்கு வெளியே இந்துக்களிற்கு முக்கியமான பல ஆலயங்கள் உள்ளன என தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள அவர், புராதான இந்து ஆலயங்களின் சேதமடைந்த பகுதிகளை பாதுகாப்பதற்கு ஏன் தொல்பொருள் திணைக்களம் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.