குருட்டுத்தனமாக பேசக்கூடாது: விடுதலைப் புலிகளை விமர்சிக்க த.ம.வி.பு. கட்சிக்கு அருகதை இல்லை- கருணா

0

விடுதலைப் புலிகளின் நடத்தை தொடர்பாக விமர்சிக்க தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினருக்கு எவ்விதமான அருகதையும் இல்லை என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.

விடுதலை புலிகள் பெண்களை கற்பழித்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக நேற்று கருத்து வெளியிட்ட அவர் இதனை தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் 2004ஆம் ஆண்டு வெருகல் போரில் பெண் போராளிகள் விடயத்தில் ஒழுக்க ரீதியான தவறினை இழைத்திருந்ததாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணித் தலைவி செல்வி மனோகர் கடந்த 10ஆம் திகதி கருத்தினைப் பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவிக்கையில், “வெருகல் படுகொலை சம்பந்தமாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி நிகழ்வை நடத்தியபொழுது விடுதலைப் புலிகளுக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக கட்சியின் மகளிர் அணியின் தலைவி விமர்சித்திருந்தார்.

விடுதலைப் புலிகள் இயக்கம் அங்குள்ள போராளிகளை கற்பழித்து படுகொலை செய்தார்கள் என்ற கருத்தைச் சொல்லியிருந்தார். உண்மையிலே இதனை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஏனென்றால் இந்த விடுதலைப் போராட்டத்துக்காக பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இதங்களது உயிர்களைத் தியாகம் செய்திருக்கின்றார்கள். ஆகவே, இவ்வாறு இருக்கையில் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாக கட்சியின் மகளிர் அணியின் தலைவி விமர்சித்திருந்தார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு கருத்துச் சொல்வதற்கு அவர்களுக்கு எவ்வித அருகதையும் இல்லை. ஏனென்றால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருப்பவர்கள் நேரடியாக விடுதலைப் போராட்டத்தில் இருந்ததில்லை. இதனால் வரலாறு தெரியாத ஒரு குருட்டுத்தனமான கருத்தை இன்று செல்வி என்பவர் தெரிவித்துள்ளார். இதனை முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை மக்களும் புரிந்துகொள்வார்கள்.

ஏனென்றால் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும் எனக்கும் ஒரு பகைமை இருந்தது உண்மை. அதனால் நான் அங்கிருந்து விலகி வந்ததுடன் பகைமை முடிந்துவிட்டது.

அப்போது பிரிந்துசெல்கின்ற கட்டத்தில் தான் வெருகல் பகுதியில் மோதல் ஏற்பட்டது. அந்த மோதலை நான் விரும்பவில்லை. அதனால் போராட்டத்தைத் தவிர்த்து போராளிகளை வீடுகளுக்கு அனுப்பியிருந்தேன்.

எனவே மகளிர் அணியின் தலையின் கொச்சைப்படுத்தும் கருத்தை வன்மையாகக் கண்டிப்பதோடு இனிவரும் காலங்களில் இவ்வாறான பிழைகளை அவர்கள் திருத்திக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்” என்று குறிப்பிட்டார்.