குர்ஆன் வாசகம் எழுதப்பட்ட சுவரொட்டியை கிழித்ததால் இலங்கையர் கொலை செய்யப்பட்டாரா? – மதவாத அமைப்புக்கு தொடர்பு?

0

சியல்கோட்டில் இலங்கையர் படுகொலை செய்யப்பட்டதை, ‘தெஹ்ரிக் லெப்பெய்க் பாகிஸ்தான்’ அமைப்பு (TLP) மீதான தடையை நீக்குவதற்கான பாகிஸ்தான் அரசாங்கத்தின் முடிவோடு தொடர்புபடுத்தக்கூடாது என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பர்வேஸ் கட்டாக் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் – சியல்கோட் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இலங்கையைச் சேர்ந்த பொறியியலாளர் பிரியந்த குமார என்பவர் ஒரு கும்பலால் அடித்து எரியூட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

குர்ஹான் வசனங்கள் பொறிக்கப்பட்ட கடும்போக்கு இஸ்லாமியக் கட்சியான ‘தெஹ்ரிக் லெப்பெய்க்’ பாகிஸ்தானின் (TLP) போஸ்டரை பிரியந்த குமார கிழித்து குப்பைத் தொட்டியில் வீசியதாலேயே அவர் இவ்வாறு கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், பெஷாவரில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்ட பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பர்வேஸ் கட்டாக்கிடம், ஊடகவியலாளரொருவர் பாகிஸ்தான் அரசாங்கம் குறித்த (TLP) அமைப்பு மீதான தடையை நீக்கிய பின்னர் சியல்கோட் கொலை நடந்ததாகவும் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க அத்தகைய குழுக்களுக்கு எதிராக அரசாங்கம் ‘பயனுள்ள அடக்குமுறையை’ பரிசீலிக்கிறதா என  கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர், இரண்டு பிரச்சினைகளையும் இணைக்கக் கூடாது என தெரிவித்தார்.

‘தெஹ்ரிக் லெப்பெய்க்’ பாகிஸ்தான் என்ற குழு சமூக ஊடகங்களில் பயனர்களால் கொடூரமான சம்பவத்துடன் இணைக்கப்பட்டபோதும் அந்தக் குழு கொலையில் இருந்து விலகி அதைக் கண்டித்தது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள காரணங்கள் உங்களுக்கும் தெரியும் என்றும் குழந்தைகள் வளரும்போது ​​அவர்கள் உணர்ச்சிவசப்படும்போது ​கொலைகள் கூட நடக்கின்றன என தெரிவித்தார்.

மேலும் ‘இது அந்த செயலின் விளைவு’ என்று அர்த்தமல்ல என்றும் பிரியந்த குமார இஸ்லாத்தை மதிக்கவில்லை என்று இளைஞர்கள் குற்றம் சாட்டியமை  திடீர் படுகொலைக்கு வழிவகுத்தது எனவும் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு அமைச்சரின் இந்தக் கருத்து சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவர் தனது ருவிட்டர் பக்கத்தில் கொலைக்கு கண்டனம் தெரிவித்ததோடு, நீதியை உறுதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் தற்போதைய இம்ரான் கான் அரசாங்கம்  ‘தெஹ்ரிக் லெப்பெய்க்’ போன்ற கடும்போக்கு மதவாத அமைப்புக்கள் மீதான தடைகளை பொலிஸாரின் எதிர்ப்பையும் மீறி நீக்கியிருந்தது.

இந்த நிலையில், குரான் வசனங்கள் பொறிக்கப்பட்ட குறித்த அமைப்பின் போஸ்டரை பிரியந்த குமார கிழித்து குப்பைத் தொட்டியில் வீசியதாலேயே அவர் இவ்வாறு கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறிருப்பினும் இந்தக் கொலைக்கும் குறித்த அமைப்பிற்கும் தொடர்புள்ளதா என்பது குறித்த உத்தியோகப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.

பாகிஸ்தான் – சியல்கொட் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இலங்கையைச் சேர்ந்த பொறியியலாளர் பிரியந்த குமார என்பவர் ஒரு கும்பலால் அடித்து எரியூட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இலங்கை அரச தலைவர்கள் உட்பட பலர் கண்டனம் வெளியிட்டிருந்தனர்.

அத்தோடு, இந்த சம்பவம் தொடர்பாக பிரதான சந்தேகநபர் உட்பட இதுவரை 132 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.