சமுர்த்தி நிவாரணத்தை குறைந்த வருமானம் பெறும் மக்களை பலப்படுத்தும் செயற்திட்டமாக மாற்ற வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானம் பெறுவோருக்கு புதிய வருமான வழிகளை ஏற்படுத்திக்கொடுத்து அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதன் மூலமே வறுமை மற்றும் சமூக ஏற்றத்தாழ்வை குறைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனால் வறுமையை ஒழிப்பதற்கு முன்னுரிமை வழங்கி சமுர்த்தி செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சமுர்த்தி, மனைப் பொருளாதார, நுண்நிதி, சுயதொழில், தொழில் அபிவிருத்தி மற்றும் கீழ் உழைப்பு அரச வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து குடும்பங்களினதும் வருமானத்தை அதிகரித்தல், கிராமிய பொருளாதாரத்தின் வளர்ச்சி மக்கள் மைய பொருளாதாரத்தை மேம்படுத்தல் என்ற விடயங்களை இதற்காக பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சமுர்த்தி வழங்குவதற்காக வருடாந்தம் 50 ஆயிரம் மில்லியன் ரூபாய் செலவிடப்படகின்றது என்றும் இந்த தொகை நாட்டுக்கு முதலீடாக வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமுர்த்தி பயனாளிகளை நிவாரணம் பெறும் மனநிலையில் இருந்து மீட்டெடுத்து நுண் தொழில் முயற்சியாளர்கள் என்ற நிலைக்கு மாற்றும் வேலைத்திட்டத்தை உடனடியாக திட்டமிட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
வலுவூட்டப்பட்ட சமுர்த்தி பயனாளிகளை சமுர்த்தி செயற்திட்டத்தில் உள்வாங்கி நாட்டுக்கு நன்மை கிடைக்கும் வழிமுறை ஒன்று தயாரிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, நுண்நிதி கடன்கள் மூலம் பிரதிபலனை வழங்குவதற்கு ஒழுங்குபடுத்தல் அவசியம் என்றும் நிதி இயலுமை குறித்து விளங்கிக்கொள்வது நுண்நிதி நிறுவனங்களின் மிக முக்கிய பணியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சமூக மாற்றத்துக்கு மக்கள் மத்தியில் உத்வேகம் தோன்றியிருக்கும் இந்த நேரத்தை வீட்டுப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் போன்ற சவால்மிக்க நிலைக்கு முகங்கொடுத்த மக்களுக்கு தமது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக வங்கிகள் சலுகை வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன்போது தெளிவுபடுத்தியுள்ளார்.
இதன் மூலமே மக்களுக்கும் நாட்டுக்கும் சிறந்த பொருளாதாரத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.