குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறப்படாத நிலைமை இலங்கையில் தொடர்ந்தும் நீடித்து வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆணையாளர் நாயக அலுவலகப் பணிப்பாளர் டேவிட் கிறிப்த் தெரிவித்துள்ளார்.
முன்ளாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்குத் தொடர்பில் நீதி வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக இந்த வழக்குடன் தொடர்புடைய பிள்ளையான் உள்ளிட்ட ஐந்து சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்குகளை சட்ட மா அதிபர் திணைக்களம் வாபஸ் பெற்றுக்கொண்டமை நீதி வழங்குவதில் தோல்வியடைந்த நிலைமையாக கருதப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
போர்க் காலத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்படாத நிலைமை நீடித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
ஜோசப் பரராஜசிங்கம் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டறிந்து தண்டனை விதிப்பதற்கு பக்கச்சார்பற்ற காத்திரமான விசாரணைகளை அரசாங்கம் உடனடியாக ஆரம்பிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்பு கூறப்படாத நிலைமை நீடித்து வருவதனை முடிவுக்குக் கொண்டு வர சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.