‘கூட்டு ஆவணத்தில் கையொப்பமிடுவதா?’ – தமிழ் முற்போக்கு கூட்டணி நாளை முடிவு!

0

தமிழ் பேசும் கட்சிகளின் சார்பில் தயாரிக்கப்படும் கூட்டு ஆவணம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி நாளை இறுதி முடிவை எடுக்கவுள்ளது.

இதற்காக அக்கூட்டணியின் அரசியல்குழு நாளை வியாழக்கிழமை அவசரமாகக் கூட்டப்பட்டுள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைக்குழு கூட்டம் ‘ஒன்லைன்’மூலம் இன்று நடைபெற்றது.

கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வே. இராத கிருஷ்ணன் ஆகியோர் உட்பட தலைமைக்குழு உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர்.

13 ஆம் திருத்தம் என அறியப்படும், இலங்கை அரசியலமைப்பில் இடம் பெற்றுள்ள ஒரேயொரு அதிகார பரவலாக்கல் சட்டத்தை முழுமையாக அமுலாக்க உரிய அறிவுறுத்தல்களை, இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிரதான தரப்பு என்ற முறையில், இலங்கை அரசுக்கு கொடுங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்து பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் சார்பாக எழுதப்பட உள்ள பொது ஆவணம் தொடர்பில் இன்றைய கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

நவம்பர் 2ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற “திண்ணை கலந்துரையாடல்” முதல் கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற கலந்துரையாடல்களில் முன்வைக்கப்பட்ட பல்வேறு வரைபுகளின் உள்ளடக்கங்கள் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டுள்ளன.