கைலாசா நாட்டுக்கு வர விரும்புபவர்களுக்கு இலவச விசா – அதிரடி அறிவிப்பு வெளியிட்ட நித்தியானந்தா

0

நித்தியானந்தா கைலாசா நாட்டுக்கு வர விரும்புபவர்களுக்கு இலவச விசா தரப்படும் என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெட்டிசன்களின் ஆல் டைம் ஹாட் டாபிக்களில் முக்கியமானவர் நித்தியானந்தா. சர்ச்சைக்குரிய பேச்சுக்களால் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகியிருக்கும் நித்தியானந்தா மீது ஆள் கடத்தல், பாலியல் கொடுமை என பல்வேறு புகார்கள் வரிசைகட்டி நிற்கின்றன.

நித்தியின் லீலைகள்!

இன்டர்போல் போலீஸாரால் தேடப்பட்டு வரும் நபரான நித்தியானந்தா எங்கிருக்கிறார் என தெரியவில்லை. கைலாசா என தனி நாட்டையே வாங்கியுள்ளதாக வீடியோ மூலம் பரபரப்பை கிளப்பும் நித்தியானந்தா, அந்நாட்டிற்காக சமீபத்தில் நாணயங்களை வெளியிட்டார். அங்கு தொழில் தொடங்கவும் அழைப்பு விடுத்தார்.

ஆனால் கைலாசா எங்கிருக்கிறது என்பது மட்டும் தெரியாமல் உள்ளது. இந்நிலையில் கைலாசாவுக்கு வர விரும்புகிறவர்களுக்கு இலவச விசா வழங்கப்படும் என நித்தி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கைலாசா அழைக்கும் நித்தி

இது தொடர்பாக அவர் வீடியோ ஒன்றின் மூலம் இதற்கான விவரங்களை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி contact@kailaasa.org என்ற மின்னஞ்சலில் விண்ணப்பம் செய்தால் மூன்று நாள் விசா இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனி விமானம்

ஆஸ்திரேலியாவிலிருந்து கைலாசாவுக்கு இலவசமாக கருடா என்ற தனி விமானத்தில் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும், சைலாசா சென்று திரும்பும் வரை உணவு, தங்குமிடம், போக்குவரத்து வசதிகள் கைலாசா நிர்வாகத்தின் சார்பாக செய்து தரப்படும் என கூறப்பட்டுள்ளது.

ஆனால் சிவனை வழிபடுகின்ற ஆன்மீக நோக்கம் உள்ளவர்கள் மட்டுமே வருகை தரவேண்டும் என்ற கன்டீஷனும் போடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மக்களே உஷார்!

சர்வதேச போலீஸாரால் தேடப்படும் நித்தியானந்தாவின் கைலாசாவில் சமீபத்தில் தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்த சிலரை போலீஸார் விசாரணைக்கு உட்படுத்தினர். இந்நிலையில் நித்தியானந்தா பரபரப்பை கிளப்பும் வகையில் அறிவிப்பை வெளியிட்டாலும் மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்கின்றனர்.