கொரோனாவால் உயிரிழந்த 8 பேர் தொடர்பான முழுமையான விபரம்

0

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 8 மரணங்கள் பதிவாகிய நிலையில் உயிரிழந்தவர்கள் தொடர்பான முழுமையான விபரத்தினை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் இந்த விடயம் தொடர்பான முழுமையான விபரத்தை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய கொலன்னாவையைச் சேர்ந்த 63 வயதான பெண்ணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கடந்த 13ஆம் திகதி உயிரிழந்தார்.

அவரின் மரணத்திற்கான காரணம் கொரோனா நிமோனியா நிலைமையே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொரளை பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதுடைய ஆணொருவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில்,கடந்த 14ஆம் திகதி அவர் உயிரிழந்தார்.

கொரோனா நிமோனியா மற்றும் அதிக இரத்த அழுத்தம் என்பன அவரின் மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடபுசல்லாவையைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் உடபுஸ்ஸல்லாவை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 15ஆம் திகதி உயிரிழந்தார்.

கொரோனா தொற்று மற்றும் நுரையீரலில் ஏற்பட்ட தொற்று என்பன அவரின் மரணத்திற்கு காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த 87 வயதுடைய ஆணொருவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கடந்த 16ஆம் திகதி உயிரிழந்தார்.

கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் இருதய நோயும் அவரின் மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயது ஆணொருவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 16ஆம் திகதி உயிரிழந்தார்.

கொரோனா நிமோனியா நிலைமையும் இருதய நோயும் அவருடைய மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலனறுவையை சேர்ந்த 66 வயதுடைய ஆணொருவர் வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்த ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்தார்.

தீவிரமடைந்த ஆஸ்துமா நிலைமையும் இரத்தம் நஞ்சானமை, கொரோனா தொற்று என்பன அவரின் மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 08 பகுதியைச் சேர்ந்த 83 வயதுடைய ஆணொருவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து ஐ.டி.எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்தார்.

இரத்தம் நஞ்சான மை மற்றும் நிமோனியா நிலைமை அவரின் மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடுதும்பர பகுதியை சேர்ந்த 75 வயதுடைய ஆணொருவர் அவிசாவளை வைத்தியசாலையில் தொற்று உறுதியானதை அடுத்து முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்றைய தினம் மரணித்தார்.

சுவாசத் தொகுதியில் ஏற்பட்ட தாக்கம் நிமோனியா மற்றும் மாரடைப்பு என்பன அவரின் மரணத்திற்கு காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 264 ஆக அதிகரித்துள்ளது.