கொரோனாவினை குணப்படுத்தக்கூடிய ஆயுர்வேத மருந்து கண்டுபிடித்த இலங்கையர்?

0

கொவிட்-19 நோய்த் தொற்றை குணப்படுத்தக்கூடிய ஆயுர்வேத மருந்து ஒன்றை இலங்கையைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் கண்டு பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட் நோய்த் தொற்றை முற்று முழுதாக குணப்படுத்தக் கூடிய வல்லமையுடைய உள்நாட்டு ஆயுர்வேத மருந்து ஒன்று, வத்துபிட்டிவல கொவிட் சிகிச்சை நிலையத்தில் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்த மருந்து தொடர்பில் மேற்கத்தைய மருத்துவ முறைமைகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட இரண்டு பரிசோதனைகளின் போது கொவிட் தொற்றாளிகள் 100 வீதம் குணமடைந்துள்ளனர் என பரிசோதனை நடாத்திய மருத்துவ குழுவினர் தெரிவிக்கின்றனர்.

கொவிட் தொற்றுக்கு எதிராக பல்வேறு தடுப்பூசிகளும் உள்நாட்டு ஆயுர்வேத மருந்துகளையும் கண்டுபிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கேகாலை பகுதியைச் சேர்ந்த உள்நாட்டு ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் இந்த புதிய மருந்தை கண்டு பிடித்துள்ளார்.

கொவிட் நோய் சிகிச்சைப் பிரிவைச் சேர்ந்த முன்னணி மேற்கத்தைய மருத்துவர்களினால் இந்த மருந்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தன்னார்வ அடிப்படையில் இந்த மருந்தை குடிப்பதற்கு சம்மதித்த 140 நோயாளிகளிடம் முதல் கட்டமாக பரிசோதனை நடாத்தப்பட்டுள்ளதுடன் இதில் எழுமாறாக தெரிவு செய்யப்பட்ட பத்து பேரிடம் நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளில் நோய்த் தொற்று பத்து பேருக்கும் குணமடைந்திருந்தது.

மேலும் இரண்டாம் கட்டமாக 25 பேரிடம் பரிசோதனை நடாத்தப்பட்டுள்ளது, இதில் பரிசோதனை முடிவுகள் கிடைக்கப் பெற்ற 13 பேருக்கும் கொவிட் தொற்று குணமடைந்திருந்தது.

மூன்றாம் கட்டமாக 19 பேரிடம் கொழும்பு வைத்திய பரிசோதனை நிலையத்தில் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவுகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்த மருந்து தொடர்பில் மேலும் பரிசோதனைகள் நடாத்தப்பட்டு சரியான முடிவுகள் எடுக்கப்படும் என ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த மருந்து தொடர்பில் இதுவரையில் அதிகாரபூர்வமாக எவ்வித இறுதியான முடிவுகளும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.