கொரோனாவிலிருந்து உலக மக்களை காப்பற்ற வேண்டி மாமாங்கேஸ்வரத்தில் விசேட யாகம்!

0

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்றினால் இலங்கை உள்ளிட்ட உலக நாட்டு மக்களை விடுவிக்கவேண்டி கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட யாகம் மற்றும் அபிசேக பூஜைகள் நடாத்தப்பட்டன.

கொரனா தொற்றினால் இன்று உலக நாடுகளில் இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துவரும் நிலையில் இலங்கையிலும் அதன் தாக்கம் அதிகரித்து வருகின்றது.

இந்த கொடிய தொற்றில் இருந்து பாதுகாக்க இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் சமய வழிபாடுகள் நடைபெற்றுவருகின்றன.

இதன் கீழ் கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தனவந்திரி மஹா யாகமும் அபிசேகம் இன்று(வெள்ளிக்கிழமை) நடாத்தப்பட்டது.

வைத்தியர்களுக்கெல்லாம் வைத்தியராக இருந்து அருள்பாலிக்கும் சிவனின் மற்றுமொரு வடிவமான தனவந்திரிப்பெருமானை நோயிலிருந்து மக்களை பாதுகாக்குமாறு வேண்டி இந்த யாகம் நடாத்தப்பட்டது.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தராஜ குருக்களினால் நடாத்தப்பட்ட இந்த வழிபாடுகளில் ஆலய பரிபாலன சபையினர் கலந்துகொண்டனர்.

இதன்போது தனவந்திரி மஹா யாகம் நடாத்தப்பட்டு அதனை தொடர்ந்து விசேட அபிசேகமும் விசேட பூஜையும் நடாத்தப்பட்டது.