கொரோனாவை காரணம் காட்டி தொழிலை பறிக்க முடியாது – தனியார் துறையினருக்கு எச்சரிக்கை!

0

கொரோனாவை காரணம் காட்டி தனியார் துறை ஊழியர்களின் தொழிலை பறிக்க முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சர் பந்துல குணவர்த்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாட்டின் இப்போதுள்ள நிலையில் நாட்டிற்கான இறக்குமதியை குறைத்தாக வேண்டும். இது குறித்து ஆரம்பத்தில் அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.

அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ இறக்குமதியின் தடைகள் இல்லை. அத்துடன் கட்டுமானப்பணிகளுக்கான பொருட்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கு இறக்குமதி அனுமதி உள்ளது.

தேசிய இறக்குமதியாளர். தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு பிரச்சினைகள் இருப்பின் நிதி அமைச்சை தொடர்புகொண்டு தமது பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட முடியும்.

அதேபோல் நாட்டில் அரச துறையினரை போல் மூன்று மடங்கு அதிகமானவர்கள் தனியார் துறையினரேயாகும். அவர்களே நாட்டின் பொருளாதாரத்தில் அதிக பங்களிப்பை செலுத்துகின்றனர். இந்த நாட்டில் அதிக சிரமங்களை எதிர்கொள்ளும் நபர்கள் அவர்களேயாகும்.

அரசாங்கத்திற்கு சுமையை கொடுக்காது அரசாங்கத்தை கொண்டு நடத்த பாரிய அளவில் கைகொடுக்கும் நபர்களாவர். ஆனால் இன்று அவர்கள் உள்ளிட்ட சகல துறையினரும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்பாக நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில் தனியார் ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை செலுத்துவது எவ்வாறு என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலைமை மேற்கத்திய நாடுகளில் உருவானால் அவர்கள் உடனடியாக நிறுவனத்தை மூடிவிட்டு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்.

எனினும் இங்கு அவ்வாறு இடம்பெற முடியாது. மிக அதிகமான ஊழியர்கள் தனியார் துறையில் உள்ளனர். அவர்களை பாதுகாக்க வேண்டும். அதற்காகவே அரசாங்கம் ஊரடங்கு காலத்திலும் படிப்படியாக நிறுவனங்களை ஆரம்பிக்க அனுமதி வழங்கியுள்ளது.

ஒரு சில விடயங்களில் அவர்களுக்கான தற்காலிக நிவாரணங்களை வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக கடன் செயற்பாடுகள் தற்காலிகமாக மூன்றுமாத காலத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும் ஏனைய பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது என்ற கேள்வி எழுந்துள்ளது.

எனவே இது குறித்து அமைச்சரவையில் அமைச்சர் தினேஷ் குனவர்தன உரிய காரணிகளை தெளிவுபடுத்தினார். முதலாளிமார் சம்மேளனத்துடன், தொழிற்சங்கங்கள், நிறுவனங்கள் அனைத்துடனும் அமைச்சர் பேச்சுவார்த்தைகள் பலவற்றை முன்னெடுத்துள்ளார். அது குறித்தும் தெளிவுபடுத்தினார்.

இதன்போது கொவிட் -19 நோய் தாக்கத்தை கருத்தில் கொண்டு நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களின் ஊழியர்கள் எவரதும் வேலைகள் பறிக்கப்பட முடியாது.

அது குறித்து தனியார் நிறுவன சங்கங்களுடன் உடன்பாட்டுக்கு வந்துள்ளோம். இதில் பிரதான இரண்டு காரணிகளாக நிறுவனங்கள் மீண்டும் தலைதூக்கும் வரையில் கொடுப்பனவில் 50 வீதத்தையேனும், குறைந்த பட்சம் 14ஆயிரத்து 500 ரூபாவுக்கு குறித்த தொகையை மாதாந்த கொடுப்பனவாக தனியார் துறையினருக்கு வழங்க வேண்டும் என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது“ எனக்குறிப்பிட்டுள்ளார்.