கொரோனா அச்சுறுத்தலுக்கு தடுப்பூசி மாத்திரமே தீர்வு- ஜனாதிபதி

0

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தடுப்பூசி மாத்திரமே தீர்வு என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றின் முதலாவது அலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு சுகாதார அதிகாரிகள் பரிந்துரைத்த சுகாதார நடைமுறைகளை மீண்டும் உரிய முறையில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,  கொரோனா வைரஸ் தொற்றுக்கு இறுதி தீர்வு தடுப்பூசி மாத்திரமேயாகும்.

ஆகவே மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் முறையான திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மேலும் உலக சுகாதார அமைப்பு (WHO) தற்போது ஒப்புதல் அளித்துள்ள நான்கு கொரோனா தடுப்பூசிகளை எதிர்காலத்தில் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

அத்துடன் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை சுகாதார அதிகாரிகள்,  முப்படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 356,000 பேருக்கு செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் தடுப்பூசி 200,000 டோஸ், ஏப்ரல் இறுதிக்குள் இறக்குமதி செய்யப்படும். மே மாதத்தில் 400,000 டோஸ், ஜூன் மாதத்தில் 800,000 டோஸ் மற்றும் ஜூலை மாதம் 1,200,000 டோஸ் இறக்குமதி செய்யப்படும். 13 மில்லியன் டோஸ் ஸ்புட்னிக் தடுப்பூசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை ஏற்கனவே  ஒப்புதல் வழங்கியுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றவுடன் அடுத்த சில வாரங்களில் சீனாவிடமிருந்து கிடைக்கப்பெற்ற 600,000 டோஸ் செனோபாம் தடுப்பூசிகளை  மக்களுக்கு வழங்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை அரச ஔடத கூட்டுத்தாபனம், பைசர் தடுப்பூசியை கொண்டு வருவதற்கு தேவையான உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளது. எனவே அதனை மிக விரைவில் நாட்டுக்கு கொண்டுவருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும்.

இதற்கிடையில் சுகாதார நடைமுறைகளை மக்கள் உரிய முறையில் பின்பற்றுவதன் ஊடாகவே கொரோனா வைரஸ் தொற்று பரவலை இல்லாமல் ஒழிக்க முடியுமென உலக சுகாதார தாபனத்தின் தலைவர்  மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஆகவே மக்களும் இந்த வைரஸ் தொற்றின் அபாயத்தை உணர்ந்து பொறுப்புடன் நடத்துக்கொள்ள வேண்டும். மேலும் இலங்கை போன்ற நாடுகளில் முடக்கத்தினை ஏற்படுத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைவதுடன் பொருளாதாரத்திலும் பாரிய பாதிப்பு ஏற்படும்” என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.