கொரோனா ஊரடங்கு – அதிகரிக்கும் விவாகரத்து வழக்குகள்!

0

என்னுடைய மோசமான திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வர இந்த ஊரடங்கு உத்தரவு எனக்கு உதவி இருக்கிறது. வீட்டில் முடங்கி இருந்த இந்த நாட்களுக்கு உண்மையில் நான் நன்றி சொல்ல வேண்டும் என்கிறார் குடும்ப வன்முறையை எதிர்கொண்ட நவ்யா. (பாதுகாப்பு காரணமாக பெயர் மாற்றப்பட்டுள்ளது)

கோவாவை சேர்ந்த 42 வயதான நவ்யாவின் கணவர் வணிகம் செய்துவந்தார். 2006ம் ஆண்டு அரசியலில் கால்பதித்து தற்போது முழு நேரமும் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

ஆண்டுகள் சில கடந்த பிறகு திருமணத்தில் உள்ள நம்பிக்கை குறைந்து மன ரீதியாக பல துன்பங்களை சந்தித்ததாக நவ்யா கூறுகிறார். உள்ளாடை வாங்க செல்லும்போதுகூட தனது கணவரின் உதவியாளர் வந்து பில் செலுத்தியதாக வேதனையுடன் நவ்யா தெரிவிக்கிறார்.

2018ம் ஆண்டு தனது 10 வயது குழந்தையுடன் நவ்யா வீட்டை விட்டு வெளியே சென்று தனியாக வாழ ஆரம்பித்தார். அப்போது முதலே தனது உணர்ச்சிகளை காயப்படுத்தும் விதமாக அவரது கணவர் தொடர்ந்து மின் அஞ்சல் அனுப்பி வந்துள்ளார்.

மகளுடன் தனியாக வாழ ஆரம்பித்தபோதும் தன்னிடம் எந்த சொத்தும் பணமும் இல்லை, ஆனால் தன் கணவர் தன்னை புரிந்துக்கொண்டு திரும்பி வந்து அழைத்து செல்வார் என்ற நம்பிக்கையுடன் வீட்டை விட்டு வெளியே வந்ததாக நவ்யா கூறுகிறார்.

தான் வேலை பார்த்து பணம் ஈட்ட முடியும் என்ற சூழ்நிலையும் இல்லாததால், தனக்கும் தன் மகளுக்குமான மாத செலவினங்களை சமாளிக்க தன் கணவர் பணம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வழக்கறிஞர் உதவியுடன் நவ்யா முன்வைத்துள்ளார்.

எனவே நவ்யாவின் கணவர் 10,000 ரூபாய் பணத்தை மாத செலவினங்களுக்கு வழங்கி வந்தார்.

மும்பை போன்ற நகரத்தில் எனது மகளுடன் தினசரி வாழ்க்கையை வாழ மாதம் 10,000 ரூபாய் போதுமா? என்ற கேள்விய நவ்யா முன்வைக்கிறார்.

”எப்போது சமரசம் பேச நான் முயற்சித்தாலும் என் உணர்வுகளை காயப்படுத்தும் விதத்தில் பேசுகிறார். என் மேல் எல்லா பழிகளையும் சுமத்தி மின் அஞ்சல் அனுப்புகிறார். அரசியல் பலத்தை பயன்படுத்தி என்னை அச்சுறுத்துகிறார்.”

”தற்போது இந்த ஊரடங்கு காலத்தில் என் சேமிப்பையே நம்பியுள்ளேன். சில நண்பர்கள் உணவுப் பொருட்கள் வாங்க எனக்கு உதவுகிறார்கள்.

இந்த நேரத்தில் கூட என் கணவர் மகள் குறித்தும் மனைவி குறித்தும் கவலை கொள்ளாமல் இருப்பது என்னை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகும் நிலைக்கு தள்ளியுள்ளது.

வழக்கறிஞரின் உதவியை நாடியுள்ளேன். ஊரடங்கு தளர்த்தப்பட்டவுடன் விவாகரத்து மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை துவங்குவேன்” என நவ்யா உறுதியாக கூறுகிறார்.

”வீட்டில் தங்களுக்கு நடக்கும் கொடுமைகள் குறித்தும், பிரச்சனைகள் குறித்தும் தினந்தோறும் சுமார் 17 குறுஞ்செய்திகள் மற்றும் 30 முதல் 40 வாட்ஸ் ஆப் குறுஞ்செய்திகள் வருகின்றன என்று வழக்கறிஞர் வந்தனா ஷா கூறுகிறார்.

திருமணமான பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை உளவியல் ரீதியாக எப்படி சமாளிப்பது? அல்லது சட்ட ரீதியாக எப்படி சமாளிப்பது என கேட்டு தினந்தோறும் என்னை தொடர்பு கொள்கிறார்கள்.

ஊரடங்கு உத்தரவால் தம்பதிகள் நீண்ட நேரம் ஒன்றாக செலவிடுவது, அவர்களுக்குள் உளவியல் ரீதியாக பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது என மனநல ஆலோசகர் பூர்ணிமா நாகராஜா கூறுகிறார்.

சமீபமாக தன்னிடம் ஆலோசனைக்காக வந்த தம்பதிகள் குறித்து பூர்ணிமா நம்மிடம் பகிர்கிறார். ”என் கணவர் தொடர்ந்து குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார் என மனைவியும், என் மனைவி தொடர்ந்து தொல்லை செய்துகொண்டே இருக்கிறாள் என கணவரும்” மாறி மாறி குற்றம் சுமத்தி கொள்கின்றனர்.

‘பொருளாதார நெருக்கடிகள் கூட தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட முக்கிய காரணமாக உள்ளன’ என்றும் பூர்ணிமா குறிப்பிடுகிறார்.

மேலும் தன்னிடம் வந்த மற்றொரு பெண், தன் கணவர் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே அதிக நேரம் செலவிடுகிறார். தனது பள்ளி மற்றும் கல்லூரி தோழிகளுடன் பேசிக்கொண்டிருக்கிறார் என பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். ஊரடங்கு காரணமாக ஆண்கள் தங்கள் நேரத்தை அதிக நேரம் சமூக ஊடகங்களில் செலவு செய்யலாம் ஆனால் அது பல பெண்களுக்கு மனதளவில் சந்தேகம் எழ காரணமாக உள்ளது என்று வழக்கறிஞர் வந்தனா கூறுகிறார்.

மேலும் இந்த ஊரடங்கு நேரத்தில் வீட்டில் தங்களுக்கு எந்த விதத்தில் கொடுமை நேர்ந்தாலும் பெண்கள் செய்வதறியாது தவிக்கின்றனர் என வந்தனா குறிப்பிடுகிறார்.

”ஏற்கனவே விவாகரத்து கோரி தன்னிடம் வந்த தம்பதியினருக்கு அறிவுரை வழங்கி இரண்டு ஆண்டுகள் சேர்ந்து வாழுங்கள், பிறகு விவாகரத்து குறித்து முடிவு செய்யலாம் என அறிவுரை வழங்கி இருந்தேன். ஆனால் தற்போது அந்த பெண் இரண்டு ஆண்டுகள் காத்திருக்க முடியாது, ஊரடங்கு தளர்த்தப்பட்ட உடனே விவாகரத்து வேண்டும் என தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து கூறுகிறார்” என வந்தனா குறிப்பிட்டார்.

விவாகரத்து கோரும் மனுவில் இருந்து நவ்யா பின்வாங்குவதாக இல்லை. மகாராஷ்டிரா நாக்பூரை பூர்வீகமாகக் கொண்ட ஹைதராபாத்தை சேர்ந்த மற்றொரு தம்பதி சமரசம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்தனர்.

இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. சிறு சிறு விஷயங்களுக்காக இந்த தம்பதியினர் சண்டை போட்டு வந்தனர்.

ஆனால், இவர்களுக்குள் ஏற்பட்ட சண்டைகளுக்கு காரணம் இவர்களது குடும்பம்தான் என்றும் இத்தம்பதிக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆலோசனை வழங்கிய வழக்கறிஞர் மஞ்சுஷா, பிபிசியிடம் தெரிவித்தார்.

அவர்களுக்கு சூழ்நிலையை புரிய வைத்து, பிரிவதனால் ஏற்படும் விளைவுகளை புரிய வைத்து சமரசம் ஏற்படுத்த மஞ்சுஷா முயற்சிக்கிறார். அவர்களுக்கு இன்னும் சில ஆலோசனை அமர்வுகள் மீதம் இருக்கின்றன என்று அவர் தெரிவித்தார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் விவகாரத்து, குடும்ப வன்முறை மற்றும் பிற திருமணம் சார்ந்த பிரச்சனைகள் அதிகரித்துள்ளதாக கூறுகிறார் நொய்டாவில் உள்ள சட்ட நிறுவனம் ஒன்றின் நிறுவனர் அக்ஷத் சிங்கள்.