கொரோனா காலப்பகுதியில் மதுபானம், புகைத்தல் கடும் விளைவை ஏற்படுத்தும்

0

கொரோனா வைரஸ் தொற்றுக் காலப்பகுதியில் மதுபானம் மற்றும் புகைத்தல் போன்றன விளைவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ள மருத்துவ சங்கம் இதனைக் கட்டுப்படுத்துமாறும் சுகாதாரப் பரிவினரை வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் மருத்துவர் த.காண்டீபன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது, “ஊரடங்குச் சட்டம் யாழ்ப்பாணத்தில் தளர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும் நாட்டில் கொரோனா தொற்றும் வாய்ப்புள்ள அசாதாரண நிலைமை நிலவுவதன் காரணமாக பொதுமக்கள் சுகாதாரத் துறையினால் கூறப்படுகின்ற விடயங்களை கடைப்பிடிக்காமையால் மீண்டும் யாழ்ப்பாணத்தில் கொரோனா தாக்கம் ஏற்பட்டுவிடும் என அஞ்சுகின்றோம்.

இதற்கு, யாழ்ப்பாணத்தில் மக்கள் மதுபானக் கடைகளில் அளவுக்கு அதிகமாகக் கூடி மதுபானங்களை அளவுக்கதிகமாக கொள்வனவு செய்ததையும் பத்திரிகைள் மூலம் அனைவரும் அறிந்து கொண்டோம்.

கொரோனா தொற்றுநோய் காலப்பகுதியில் மதுபானம், புகைத்தல் போன்றன கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

அத்துடன், மதுபானம் குடிப்பவர்கள் சமூகத்தில் சமூக விலகலை கடைப்பிடிக்க மாட்டார்கள் என்பதுடன், வழக்கமாக மதுபானம் அருந்துபவர்கள் குழுக்களாக இருப்பார்கள் என்ற நிலையில் சமூக தூரத்தைப் பராமரிக்க முடியாது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

அதுமட்டுமல்லாது ஒருவரில் இருந்து இன்னொருவருக்கு இலகுவில் வைரஸ் தொற்றுவதற்குச் சந்தர்ப்பம் அதிகம் என்பதுடன், இக்காலகட்டத்தில் மது அருந்துவதால் யாழ்ப்பாணத்தில் அதிக துஷ்பிரயோக சம்பவங்களளும் அதிகரிக்கலாம். எனவே, தற்போதைய சூழலில் சமூகத்திற்குள் தேவையற்ற ஒழுக்கச்சரிவு ஏற்படும்.

இதேவேளை, புகைபிடிப்பவர்கள் கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு இந்த நோய் அதிகரித்து மரணத்தையும் ஏற்படுத்தலாம். புகையிலைப் பொருட்களையும் புகைப்பதைத் தவிர்க்குமாறும் மதுபானம் அருந்துவதை தவிர்க்குமாறும் நாங்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகின்றோம்.