கொரோனா குறித்து கொழும்பில் வசிப்பவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்து!

0

கொரோனா தொற்று குறித்து கொழும்பில் வசிப்பவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனா வைரஸ் என்பது மனிதனில் இருந்து மனிதனுக்கு பரவக்கூடியது. எனவே, சன நடமாட்டம் அதிகமாகவுள்ள பகுதிகளில் அது வேகமாக பரவக்கூடும்.

எனவேதான் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு கடந்த காலங்களில் கோரியிருந்தோம்.

கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு நகரிலும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் குறுகிய பிரதேசத்துக்குள் அதிகளவானவர்கள் வசிக்கின்றனர். வீடுகளிலும் அதிகளவானவர்கள் இருக்கின்றனர்.

எனவே, வைரஸ் தாக்கம் ஏற்பட்டால் அது வேகமாக பரவக்கூடும். ஆகவே மக்கள் தனது சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றவேண்டும். சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினரும் இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளனர்.

33 ஆவது கொத்தணிபரவல்மூலம் (மினுவாங்கொட) கொழும்பு மாவட்டத்தில் 160 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில்போல் கொழும்பில் கட்டுப்பாடுகளை விதிக்கும் தீர்மானம் தற்போதைக்கு மேற்கொள்ளப்படவில்லை. எது எப்படியிருந்தாலும் மக்கள் தமது சுய பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்.

அதேவேளை, கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான வசதிகள் உள்ளன. நோயாளிகளுக்கான கட்டில்களும் போதுமாளனவு இருக்கின்றன“ எனக் குறிப்பிட்டுள்ளார்.