கொரோனா வைரஸ் தொடர்பாக பொய்யான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்புபவர்களுக்கு எதிராக ஜனாதிபதியின் செயலகப் பிரிவுக்கு முறைப்பாடு செய்யவுள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொடர்பான அம்பாறை மாவட்டத்தின் நிலைவரம் குறித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “கொரோனா நோயின் தாக்கத்தைத் தொடர்ந்து உண்மையில் அதிக உயிரிழப்புகளால் உலகமே உறைந்து கொண்டிருக்கும்போது, முடிந்தளவு இந்தப் பிரச்சினையிலிருந்து எமது மக்களைக் காப்பாற்றுவதற்காக முயற்சிக்கிறோம்.
அந்தவிதத்தில் உண்மையில் ஜனாதிபதியின் கீழமைந்த செயலணி சிறப்பாக வேலை செய்துகொண்டிருக்கிறது. அதேபோன்று சுகாதாரத் துறையினர் இன்னொருபுறம் வேலைசெய்து கொண்டிருக்கின்றார்கள். பொலிஸார், முப்படையினர், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் பகுதிகள், ஊடகவியலாளர்கள் என பல தரப்பினர் கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ளார்கள்.
இவ்வாறு இருக்கையில், சில இடங்களில் நாம் தடங்கல்களையும் எதிர்கொள்கிறோம். அதாவது கொரோனா சம்பந்தமான செய்திகளை வதந்தியாகப் பரப்புவதில் பதிவுகளை செய்யாத ஊடகங்கள் ஈடுபடுகின்றன.
எனினும் உண்மையில் மக்கள் பதிவுசெய்யப்பட்டவர்கள் அல்லது அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட ஊடகங்களினால் வழங்கப்படுகின்ற ஊடகச் செய்திகளை மட்டும் நம்ப வேண்டும்.
அந்தவகையில் நாங்கள் பதியப்பாடாது செயற்படுகின்ற ஊடகங்கள் என்று மக்கள் மத்தியில் நடமாடும் வதந்திகளை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். செய்திகள் என்ற போர்வையில் வதந்திகளை வெளியிட்டு மக்களை ஒரு சங்கடத்துக்குள் தள்ளி சுகாதாரத் துறையையும் இக்கட்டான நிலைக்கும் கொண்டுசெல்கிறது.
வதந்தி மயப்படுத்தப்பட்ட செய்திகளை எந்தவிதமான தங்குதடையின்றி எழுதித் தள்ளுகிறார்கள். உண்மையில் இந்த சூழலில் பொறுப்பு மிக்கவர்களாக ஒவ்வொருவரும் நடந்துகொள்ள வேண்டும்.
இந்நிலையில், இவ்வாறு வதந்திகளைப் பரப்புகின்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி செயலகப் பிரிவுக்கு எங்களால் மிக விரைவில் முறைப்பாடு செய்யப்பட இருக்கிறது” எனத் தெரிவித்தார்.