கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைத்தளங்களில் வீண் வதந்திகளை பரப்புகின்றவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘கொரோனா வைரஸ் அல்லது கோவிட் – 19 பரவலை தடுக்க அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து மக்கள் மத்தியில் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சில சமூக ஊடகங்கள் செயற்பட்டு வருகின்றன.
வதந்திகளை பரப்பி வரும் நபர்கள் தொடர்பில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
வெளிநாட்டிலிருந்து வருகை தந்த நபர்கள் உள்ளடங்களாக அனைவரும் வீட்டுகளில் தரித்திருப்பதன் மூலமும், சுகாதார மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்களின் ஆலோசனைகளைப் பின்பற்றுவதன் மூலமும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
நாட்டின் அனைத்து மக்களையும் வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்துள்ள பொறுப்புகளைப் போலவே, பாதுகாப்பு உட்பட்ட அனைத்து அரச நிறுவனங்களும், முப்படை மற்றும் பொலிஸ் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து அனைத்து இலங்கையர்களும் கொரோனா வைரஸ் தக்கத்திலிருந்து 22 மில்லியன் மக்களைப் பாதுகாக்க முன்வர வேண்டும்.
அத்துடன், பொதுமக்கள் மத்தியில் வீணான அச்சத்தை ஏற்படுத்தாமல் பொறுப்புடன் செயல்பட வேண்டும். தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலையானது, 2009ஆம் ஆண்டில் பயங்கரவாதத்தை தோற்கடிக்க முழு நாடும் ஒன்றிணைந்ததற்கு சமமானதாகும்.
கொரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்ள அனைவரும் வேறுபாடுகளை களைந்து அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு முழுமையாக ஆதரவளிக்க வேண்டும்.
முப்படை, பொலிஸ் மற்றும் புலனாய்வு அமைப்புக்கள் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரமாக முன்னெடுத்து வருவதனை பாதுகாப்பு செயலாளர் என்ற வகையில் என்னால் உறுதியாக கூறமுடியும்.
வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்பட்டோர் எதுவித அச்சமும் கொள்ள தேவையில்லை என தெரிவித்த மேஜர் ஜெனரல் குணரத்ன, சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ளல் செயல்முறைக்கு உட்பட மக்கள் தங்கள் சொந்த வீடுகளில் இருக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
இதுவே வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழிமுறையாகும். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபரை அடையாளம் காணும் போது, சிகிச்சைக்காக அவர்களை ஐடிஎச் போன்ற வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம்.
நோயாளிகளை வைத்தியசாலையில் அனுமதிப்பதுடன் எமது பணி நிறைவு பெறுவதில்லை. அவர்களுடன் தொடர்புகளை பேணியோர் தொடர்பாகவும் நாம் அவதானம் செலுத்துகின்றோம்.
அவர்கள் இருக்கும் இடத்தை நாம் கண்டுபிடிக்கத் தவறினால், அவர்கள் தங்கள் சொந்த வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைகளுக்கு உட்படுகிறார்களா என அறிய புலனாய்வு அமைப்புகளின் உதவியைப் பெற்றுக் கொள்கிறோம்.
14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்களின் வீடுகளுக்கு பொலிஸார் ஸ்டிக்கர் ஒன்றினை ஒட்டி அடையாளமிடுகின்றனர். இச்செயல்முறை, அவர்களை தங்கள் சொந்த சமூகங்களிலிருந்து தனிமைப்படுத்துவதற்காக அல்ல. கொரோனா வைரஸ் அடுத்தவர்களுக்கு பரவாமல் தடுக்கவே அவ்வாறான தனிமைப்படுத்தல் அவசியம்.
உலகளாவிய தொற்றுநோயாக மாறியுள்ள கொரோனா வைரஸ் பரவுவலை சிறிய தேசம் எவ்வாறு வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியது என்பதற்கு இலங்கை உலகிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைய வேண்டும்.
வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகள் தொடர்பான சமூக வலைத்தளங்களில் தவறான பதிவுகளை வெளியிட வேண்டாம்.
புலனாய்வு அமைப்புகளுக்கு அத்தகைய பொறுப்பற்ற நபர்கள் அல்லது குழுக்களை கைது செய்ய அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
அமைதியான நாட்டிற்காக ஏங்கிய அனைத்து இலங்கையர்களும் ஒரே காரணத்திற்காக ஒன்றுபட்டதால், 10 ஆண்டுகளுக்கு முன்னர் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதில் இலங்கை உலகிற்கு ஒரு முன்மாதிரியாக திகழ்ந்தது.
COVID-19 ஐ தோற்கடித்து மீண்டும் உலகிற்கு ஒரு முன்மாதிரியாக திகழ நாம் மீண்டும் ஒன்றுபட வேண்டிய நேரம் இதுவாகும்’ எனத் தெரிவித்துள்ளார்.