“கொரோனா நோய் தடுப்புதான் முக்கியம். மற்றதெல்லாம் அப்புறம்” என்று கூறி திருமணத்தை பிற்போட்ட பெண் மருத்துவரின் முடிவு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் முக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட காரமூலை பகுதியை சேர்ந்த முகமது, சுபைதா தம்பதியரின் மகள் ஷீபா. இவர் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த காலிப்கான், சுகரா பீவி ஆகியோரின் மகன் அனஸ் முகமதுக்கும் கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது.
அப்போது இவர்களுக்கு மார்ச் 29-ம் திகதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து திருமணத்திற்கான வேலைகளும் தடபுடலாக துவங்கின.
கல்யாண மண்டபம் துவங்கி, பிரியாணி சாப்பாடு, அலங்காரம் என அனைத்திற்கும் முன்பதிவு செய்யப்பட்டு அழைப்பிதழ் வரை அச்சடிக்கப்பட்டு சுற்றம் நண்பர்கள் என அனைவருக்கும் கொடுக்கப்பட்டும் விட்டது.
இதனையடுத்து பெண் மருத்துவர் ஷீபா, தான் பணிபுரியும் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாத விடுமுறைக்கு விண்ணப்பித்து மருத்துவமனை நிர்வாக அனுமதியும் பெற்றுவிட்டார்.
கல்யாண கனவில் இருந்தபோதுதான் உலகையே உலுக்க ஆரம்பித்த கொரோனாவின் தாக்கம் கேரளாவில் பரவ ஆரம்பித்தது. மார்ச் மாத துவக்கத்தில் குறைந்த எண்ணிக்கையில் இருந்த கொரோனா தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.
இதனால் அரசு மருத்துவ கல்லூரியில் கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணியமர்த்தப்பட்டார் ஷீபா. தினமும் பணிக்கு சென்று வருவதும் பல நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கி இருந்து கொரோனா நோயாளிகளை கவனித்து வந்த ஷீபா, மார்ச் 29-ம் திகதி நடக்க இருந்த தனது திருமணத்தை நிறுத்தச் சொல்லியுள்ளார்.
இதனையடுத்து சற்று தயங்கிய பெற்றோரிடம், “இப்போதைக்கு கொரோனா நோய் தடுப்புதான் முக்கியம். மற்றதெல்லாம் அப்புறம்,” என கட்டாயமாக கூறியுள்ளார் ஷீபா. இதனையடுத்து அவரது திருமணம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு தனது இரண்டு மாத விடுமுறையை இரத்து செய்வது தொடர்பாக கடிதம் கொடுத்துவிட்டு மீண்டும் தனது கொரோனா வார்டில் பணியை தொடர்ந்து வருகிறார் மருத்துவர் ஷீபா.
ஷீபாவின் திருமணமான மூத்த சகோதரி ஷுமிஷா, ஷீபா பணியாற்றும் அதே கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விரிவுரையாளராக பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.