கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,068 ஆக உயர்வு

0

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 08 பேர் நேற்று (வெள்ளிக்கிழமை) இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நேற்று நள்ளிரவு நிலவரப்படி நாட்டில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,068 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுக்குள்ளான 439 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன், கொரோனா தொற்றுக்குள்ளான 620 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

நோய்த்தொற்று சந்தேகத்தில் 110 பேர் நாடாளாவிய ரீதியில் 29 வைத்தியசாலைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நேற்று இறுதியாக அடையாளம் காணப்பட்ட 8 பேரில் 7 பேர் கடற்படை வீரர்கள் எனவும், ஒருவர் குவைத்தில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதேபோல், இதுவரை தொற்றுக்குள்ளானவர்களில் 612 பேர் பாதுகாப்பு தரப்பினர் என்றும் அவர்களில் 600 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் முப்படைகளின் பதில் பிரதானி, இராணுவத்தளபதி சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.