கொரோனா தொற்றாளர் ஒருவர் உயிரிழப்பு: மட்டக்களப்பு நகரம் முடக்கப்பட்டது

0

மட்டக்களப்பு மாநகரசபை பொதுச்சந்தைக்கு அருகிலுள்ள மூர் வீதியினைச் சேர்ந்த  79 வயதுடைய முதியவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா  வைரஸ் தொற்றுள்ளமை இன்று (சனிக்கிழமை) கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து மட்டக்களப்பு நகரப் பகுதி முடக்கப்பட்டு, வீதிகள் யாவும் மூடப்பட்டுள்ளதாக அம்மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் சுகயீனம் காரணமாக வீட்டில் இருந்த நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து உயிரிழந்தவர் மீது மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டதை தொடர்ந்து, சடலத்தை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லவதற்கான நடவடிக்கையினை பொது சுகாதார ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் குறித்த பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் உயிழந்தவரின் சடலத்தை பார்க்க சென்றவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.