கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 23 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நேற்று(வியாழக்கிழமை) மாத்திரம் 525 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, பேலியகொட மற்றும் மினுவாங்கொட கொத்தணியுடன் தொடர்புடைய 432 பேருக்கும், சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 93 பேருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 46 ஆயிரத்து 780 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 638 பேர் நேற்று வீடு திரும்பியுள்ளனர்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 39 ஆயிரத்து 661 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், நாட்டிலுள்ள 66 கொரோனா சிகிச்சை நிலையங்களில் 6 ஆயிரத்து 897 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் 747 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் உயிரிழந்துள்ளமை நேற்று இரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி மிதிரிகல பிரதேசத்தை சேர்ந்த 53 வயதான ஆண் ஒருவர் வதுபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா தொற்று மற்றும் வலிப்பு ஆகிய நோய்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அத்துடன், பேருவளை பிரதேசத்தை சேர்ந்த 62 வயதான ஆண் ஒருவர் தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா நிமோனியா, இரத்தம் விஷமடைந்தமை மற்றும் சிறுநீரக நோய் ஆகியன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 89 வயதான ஆண் ஒருவர் தனது வீட்டில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா நிமோனியா தாக்கம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 222 ஆக அதிகரித்துள்ளது.