கொரோனா தொற்றினால் 27 வயது யுவதி உயிரிழக்க காரணம் என்ன?

0

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று புதிதாக 4 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவிக்கின்றது.

கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஆண்ணொருவர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

கொவிட் தொற்றுடன் ஏற்பட்ட நிமோனியா நிலைமையே இந்த உயிரிழப்புக்கான காரணம் என சுகாதார தரப்பினர் கூறுகின்றனர்.

இதேவேளை, கொழும்பு 15 யை சேர்ந்த 27 வயதான யுவதியொருவரும் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த யுவதிக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த நிலையிலேயே, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

கொவிட் தொற்றுடன் ஏற்பட்ட சுவாச கோளாறே இந்த யுவதி உயிரிழப்பதற்கான காரணம் என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், களுத்துறை பொக்குனுவிட்ட பகுதியைச் சேர்ந்த 59 வயதான பெண்ணொருவரும் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

கொவிட் தொற்றுடன் ஏற்பட்ட இரத்த அழுத்தமே உயிரிழப்பிற்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

களுத்துறை – ஹல்தொட்ட பகுதியைச் சேர்ந்த 86 வயதான ஆண்ணொருவரும், கொவிட் வைரஸ் தாக்கத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18,841 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 12903 பேர் குணமடைந்துள்ளதுடன், எஞ்சிய 5865 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.