கொரோனா தொற்றின் இரண்டாம் அலையானது மிக வேகமாக பரவிவருகின்றது – இராணுவத்தளபதி!

0

கொரோனா தொற்றின் இரண்டாம் அலையானது மிக வேகமாக பரவிவருவதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “மேல்மாகாணத்திலேயே அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். அதிலும் இம்முறை மிகவும் வேகமாக தொற்று பரவிவருகின்றது.

இது தொடர்பாக ஆராய்வதாற்காக விசேட பரிசோதனைகளை ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தில் முன்னெடுக்கபட்டுள்ளது. கந்தகாடு, பேலியகொட, மினுவாங்கொடை ஆகிய பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்ளின் மாதிரிகளை கொண்டு இந்த பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த ஆய்வு அறிக்கையும் எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. மேலும், மேல்மாகாணத்தில் அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காண்பதை தொடர்ந்து மேல்மாகாணத்திற்கு இன்று இரவு முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு அமுலில் இருக்கும். திங்கள் காலை கண்டிப்பாக ஊரடங்கு தளர்த்தப்படும்.  ஆனால் தற்போது ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட மாட்டாது“ எனக் குறிப்பிட்டுள்ளார்.