கொரோனா தொற்றுக்குள்ளான எந்தவொரு நோயாளியும் கவலைக்கிடமாக இல்லை!

0

கொரோனா தொற்றுக்குள்ளான எந்தவொரு நோயாளியும் கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

பொதுசுகாதார பிரிவு தொடர்பான பிரதி பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளான 43 பேர், விசேட வைத்தியக்குழுவின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் சுமார் 220 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்கள் 16 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த கண்காணிப்பு நிலையங்களில் 2 ஆயிரத்து 258 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, வௌிநாடுகளிலிருந்து இன்று(புதன்கிழமை) நாட்டை வந்தடையும் அனைவரையும் கண்காணிப்பு நிலையங்களில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தவுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

நாட்டை வந்தடைந்த ஆயிரத்து 500 முதல் இரண்டாயிரம் பேர் வரையில் இதுவரையில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படாதுள்ளதாகவும் இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது.

அவர்களின் வசிப்பிடங்களை அடையாளங்காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

அது குறித்து ஏனையோர் அறிந்துகொள்வதற்காக பொலிஸார் ஊடாக அறிவித்தலொன்றை வௌியிட தீர்மானித்துள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்கு வருகை தந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படாதுள்ளவர்கள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் கோரியுள்ளார்.