கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணின் ஊடாக வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் இல்லை

0

கெப்பெத்திகொல்லாவ பகுதியில் கொவிட் 19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட பெண்ணின் ஊடாக வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் இல்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 

அவர் கிருமி தொற்று நீக்கத்திற்கு உட்படுத்தப்பட்டவர் என தெரிவித்த அவர், இந்த நிலையில் அவர் தொற்றுக்குள்ளானமை அரிதாக நடைபெறும் சம்பவம் என்றும் எனினும் அது குறித்து வியப்படைய வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறினார். 

குறித்த பெண் தொற்றுக்குள்ளாகிய நிலையில் குவைத்திலிருந்து வந்து சிகிச்சை பெற்று குணமடைந்திருந்த நிலையில் அவரின் உடலில் மீண்டும் கொரோனா தொற்றுக்குரிய அறிகுறிகள் தென்பட்டன. 

அனுராதபுரம் கெப்பெத்திகொல்லாவ பகுதியில் வசிக்கும் 36 வயதான குறித்த பெண் மே மாதம் 18 ஆம் திகதி குவைட்டிலிருந்து நாடு திரும்பிய நிலையில் திருகோணமலையில் உள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் மே மாதம் 28 ஆம் திகதி கொரோனா தொற்றுக்கு உள்ளானார். 

அதன் பின்னர் அவர் ஹோமாகமயில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள கொவிட் 19 நோயாளர்களை பராமரிக்கும் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

இந்த நிலையில் குறித்த பெண் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரே குணமடைந்து கெப்பெத்திகொல்லாவ பகுதியில் உள்ள அவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். 

இவ்வாறான நிலையில் நேற்று முன்தினம் அவரின் உடலில் கொவிட் 19 தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து அவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

அப்போது அவருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில் அவர் மீண்டும் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியமை உறுதிப்படுத்தப்பட்டது.