கொரோனா தொற்று குறித்து ஆய்வில் வெளியாகியுள்ள புதிய தகவல்!

0

கொரோனா வைரஸ் நோய் அறிகுறிகள் குழந்தைகளின் இதயத்தை கடுமையாக பாதிப்படையச்செய்யும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் குழந்தைகளையும் பாதித்து வருகிறது. பெரும்பாலான குழந்தைகள் அறிகுறி இல்லாமலேயே அந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தொடக்கத்தில் குழந்தைகளுக்கு எளிதில் கொரோனா தொற்று பரவாது என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் பின்னர் நடந்த ஆய்வில் குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ், அறிகுறிகளை காட்டாமலேயே பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் கொரோனா வைரஸ் பரவலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

இந்தநிலையில் கொரோனா வைரஸ் நோய் அறிகுறிகள் குழந்தைகளின் இதயத்தை கடுமையாக பாதிப்படையச்செய்யும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இ கிளினிக்கல் மெடிசன் இதழில் வெளியிடப்பட்ட அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

குழந்தைகளின் அழற்சி நோய் அறிகுறிகள் கொரோனா வைரசுடன் இணைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. இதனால் அவர்களது இதயம் கடுமையாக பாதிக்கப்படலாம்.

இதன்மூலம் சில குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் கண்காணிப்பு தேவைப்படக்கூடிய அளவுக்கு அவர்களின் இதயத்தை சேதப்படுத்தும் நிலை உள்ளது.

600க்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் அழற்சி நோய் அறிகுறிகள் குறித்து ஆய்வு செய்த போது ஆரோக்கியமாக உள்ள குழந்தைகள் அறிகுறி இல்லாமல் 3 அல்லது 4 வாரங்களுக்கு பிறகு அவர்களை வைரஸ் தொற்று தாக்குகிறது என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து நிபுணர்கள் கூறும்போது, ‘குழந்தைகளுக்கு வைரசின் அறிகுறிகள் எதுவும் இல்லாமல் இருக்கலாம்.

அவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். சில வாரங்கள் கழித்து குழந்தைகள் உடலில் அழற்சி, வீக்கம் ஆகியவை ஏற்படுத்தலாம்.

அதன்பின் தான் அவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியவரும்’ என்றனர்.

விஞ்ஞானிகள் உலகம் முழுவதும் 662 அழற்சி நோய் அறிகுறியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற குழந்தைகளை ஆய்வு செய்தபோது அவர்களில் 71 சதவீதம் பேர் தீவிரசிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

60 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மோசமாக பாதிக்கப்பட்டு 8 நாட்கள் வரை வைத்தியசாலையில் இருந்துள்ளனர். 662 குழந்தைகளுக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

73.7 சதவீத குழந்தைகளுக்கு வயிற்றுவலி அல்லது வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. 68.3 சதவீதம் குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டது. 90 சதவீத குழந்தைகளுக்கு இதயத்தை ஸ்கேன் செய்து பார்த்த போது அதில் 54 சதவீதம் பேருக்கு முடிவுகள் அசாதாரனமாக இருந்தது.

5க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வென்டிலேட்டர் உதவி தேவைப்பட்டது . 11 குழந்தைகள் இறந்தன.

இதுகுறித்து அமெரிக்காவின் தான் ஆன்டினோவில் உள்ள சுகாதார மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் அல்வரு, மோரேரா தெரிவித்துள்ளதாவது,

தற்போது ஒரு புதிய குழந்தைப்பருவ நோய் உருவாகி இருக்கிறது. இது கொரோனா வைரசுடன் தொடர்புடையது. இது பல உறுப்புகளை பாதிக்கும் என்பதால் மிகவும் ஆபத்தானது.

இதயம் மற்றும் நுரையீரல், இறைப்பை குடல் அமைப்பு அல்லது நரம்பியல் மண்டலம் என எதுவாக இருந்தாலும் அந்த நோய் அரிகுறிகள் பலவிதமான பரிமாற்றங்களை கொண்டிருக்கிறது.

ஆரம்பத்தில் இது மருத்துவர்களுக்கு புரிந்து கொள்வதில் சவாலாக இருந்தது” என அவர்கள் கூறினர்.