கொரோனா பாதித்த தாய்மார், குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரலாமா?

0

கொரோனா வைரஸ் கொலைகார வைரஸ் என்று உலகமே குற்றம் சுமத்துகிறது. காரணம், இதுவரை உலகமெங்கும் 76½ லட்சம் பேருக்கு அதிகமாக பாதித்து இருக்கிறது. கிட்டத்தட்ட 4½ லட்சம் பேர் உயிர்களைப் பறித்திருக்கிறது. இன்னும் அதன் ஆதிக்கம் உலகநாடுகளில் எல்லாம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

கொரோனா வைரசிடம் இருந்து உலகமே ஒரே நேரத்தில் விடுதலைப் போராட்டம் நடத்தி வருகிறது என்றால் அது மிகையல்ல.

ஆனால் இந்த கொரோனா வைரசுக்கும் கொஞ்சம் தாய்மை இருக்கிறதுபோல.

ஆமாம், அதனால்தான் தாய்மார்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தாலும், அவர்கள் தாய்ப்பால் தந்தால் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படுத்தாது என தெரிய வந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதித்த தாய்மார், தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரலாமா, கூடாதா என்ற சந்தேகம் உலகளாவிய ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. இப்போது இதற்கு உறுதியான பதில் கிடைத்திருக்கிறது. தரலாம் என்பதே பதில்.

இந்தப் பதிலை சொல்லி இருப்பது உலக சுகாதார நிறுவனம்.

இந்த அமைப்பின் தலைவரான டாக்டர் டெட்ரோஸ் அதனோம், நேற்று முன்தினம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் நிருபர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் இது பற்றி கூறும்போது, “கொரோனா வைரஸ் தொற்று சந்கேத்துக்கு இடமான தாய்மார்கள் அல்லது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட தாய்மார்கள், தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவதை ஊக்குவிக்க வேண்டும். உடல்நிலை மிகவும் மோசமானால் தவிர, மற்றபடி அவர்களை குழந்தைகளிடம் இருந்து பிரித்து வைக்கக்கூடாது” என திட்டவட்டமாக குறிப்பிட்டார்.

அவர் மட்டுமல்ல, தாய்மைப்பேறு, பிறந்த குழந்தை, குழந்தை, மற்றும் இளம்பருவ சுகாதார இயக்குனர் டாக்டர் அன்சூ பானர்ஜியும் இதுபற்றி குறிப்பிடத்தவற வில்லை.

அவர் கூறும்போது, “இதுவரை தாய்ப்பாலில் நேரடியாக கொரோனா வைரசை கண்டுபிடிக்க முடியவில்லை. தாய்ப்பாலில் ஆர்.என்.ஏ. கொஞ்சம் இருக்கிறது. ஆனால் நேரடி வைரஸ்களை இதுவரை எங்களால் தாய்ப்பாலில் காண முடியவில்லை. எனவே தாய்மார்களிடம் இருந்து குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவும் ஆபத்து இதுவரை நிறுப்படவில்லை” என தெரிவித்தார்.

தொடர்ந்து டாக்டர் டெட்ரோஸ் அதனோம் கூறிய கருத்துக்கள் இவை:-

தாய்ப்பால் ஊட்டுகிற தாய்மார்களிடம் இருந்து அவர்களுடைய குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவுமா என்பது பற்றி மிக கவனமாக உலக சுகாதார நிறுவனம் ஆராய்ந்து இருக்கிறது.

குழந்தைகளுக்கு கொரோன வைரசின் ஆபத்து குறைவாக இருப்பதை நாங்கள் அறிவோம். ஆனால் பிற எண்ணற்ற நோய்கள் தாக்கும் ஆபத்து உண்டு. ஆனால் அதையெல்லாம் தாய்ப்பால் தடுத்து நிறுத்தி விடுகிறது.

எங்களுக்கு கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் உலக சுகாதார நிறுவனம் சொல்வது என்னவென்றால், கொரோனா வைரஸ் தொற்று பரவும் ஆபத்தை விட , தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படுகிற நன்மைகள்தான் அதிகம்.

– இப்படி சொல்கிறார் டாக்டர் டெட்ரோஸ் அதனோம்.

உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸ் தொற்று உள்ள தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதற்கு சில விதிமுறைகளையும் வகுத்து அளித்து இருக்கிறது. அவை இவைதான்-

* தாய்மார் நல்ல சுவாச சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

* கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும்.

* குழந்தையை தொடுவதற்கு முன்பும், தொட்ட பின்பும் கைகளை நன்றாக சுத்தம் செய்து விட வேண்டும்.

* தன்னைச்சுற்றியுள்ள இடங்களை மேற்பரப்புகளை எப்போதும் கிருமி நாசினி தெளித்து சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

எனவே கொரோனா வைரஸ் பாதித்த தாய்மார்கள், தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதற்கு கொஞ்சம் கூட தயக்கமே வேண்டாம். இதுதான் உலக சுகாதார நிறுவனத்தின் உறுதியான வழிகாட்டுதல்.