பெரியகல்லாறு பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்றுவரும் வைத்தியசாலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இன்று(ஞாயிற்றுக்கிழமை) திடீர் விஜயம் செய்திருந்தார்.
கொரோனா வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்களின் பிரச்சனை தொடர்பாகவும் வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் மற்றும் பிரச்சனைகள் குறித்தும் அவர் இதன்போது ஆராய்ந்துள்ளார்.
குறித்த வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து பலரும், இரா.சாணக்கியனின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தனர். இந்தநிலையில் குறித்த வைத்தியசாலைக்கு உணவினை விநியோகிப்போருடன் தொலைபேசி ஊடாக உரையாடியதுடன், உணவின் தரத்தினை பேணுமாறு வலியுறுத்தியிருந்தார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட இரா.சாணக்கியன், “நாட்டில் தற்போது அனைத்து பிரதேசங்களிலும் கொரோனா தொற்று மிக மோசமாக பரவிக்கிக் கொண்டுவரும் நிலையில், பெரியகல்லாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்கள் முன்வைத்த முறைப்பாடுகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு அமைவாக இதுகுறித்து ஆராயும் நோக்கில் இங்கு வருகை தந்திருந்தேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தினை எடுத்துக்கொண்டால் இங்குள்ள கொரோனா வைத்தியசாலைகளில் 96 வீதமான கட்டில்கள் நிரப்பப்பட்டுள்ளன. எனவே மேலதிகமாக வைத்தியசாலைகளை அமைத்து நோயாளர்களை அனுமதிக்க வேண்டிய ஒரு தேவை காணப்படுகின்றது.
அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கொண்டுவரப்படும் அன்டிஜன் சோதனை கருவிகளின் எண்ணிக்கை ஆயிரமாகவே காணப்படுகின்றது. ஆறு இலட்சம் பேர் உள்ள ஒரு மாவட்டத்தில் வாரத்திற்கு ஆயிரம் அன்டிஜன் பரிசோதனைகளே செய்யப்படுகின்றன.
பி.சி.ஆர் பரிசோதனையினை எடுத்துக்கொண்டால் நாளொன்றிற்கு 400 இற்கும் குறைவாகவே செய்யப்படுகின்றன. இதன்காரணமாக ஆபத்தான சூழலிலேயே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
ஆனால் இதையும் விட கவலையான ஒருவிடயம் என்னவென்றால் இந்த கொரோனா காலத்தில் கூட, மக்களினுடய நலனை பற்றி சிந்திக்காமல் ஒரு சிலர் தங்களுடைய வியாபாராத்தில் மாத்திரம் கவனம் செலுத்துகின்றனர்.
இந்த வைத்தியசாலையில் 150 கட்டில்கள் உள்ளன என்றால், ஒரு நோயாளிக்கு ஒரு நாளைக்கு சாப்பாட்டிற்கான செலவு 850 அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்றது. ஆனாலும் உணவின் தரம் குறித்து வைத்தியசாலையில் பணியாற்றுபவர்களே குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
மக்கள் கொரோனா தொற்று காரணமாகவே இந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்களே தவிர, அவர்கள் எந்த வகையிலும் வசதி குறைந்தவர்களோ, அல்லது சாப்பிட வழியில்லாதவர்களோ அல்ல எனவே போசாக்கு மிக்க உணவுகளை வழங்க வேண்டியது, உணவு வழங்குபவர்களின் கடமை“ எனவும் குறிப்பிட்டுள்ளார்.