கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான போராட்டத்திற்கு அமெரிக்கா நிதியுதவி!

0

கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான போராட்டத்திற்கு உதவும் நோக்கில் 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவியை வழங்குவதற்கு அமெரிக்கா முன்வந்திருக்கிறது.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்தல் ஆகியவற்றுக்கும் சுகாதார சேவையாளர்களின் பாதுகாப்பிற்கு உதவத்தக்க வகையிலும் இந்த நிதியுதவி சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையத்தின் ஊடாக வழங்கப்படுவதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்திருக்கிறது.

‘மிகவும் நெருக்கடி மிக்க சூழ்நிலைகளின் போது இலங்கையர்களும், அமெரிக்கர்களும் ஒருவருக்கொருவர் ஆதரவாக ஒன்றிணைந்து செயற்பட்டிருக்கிறார்கள்’ என்று அமெரிக்கத் தூதுவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அந்தவகையில் கொரோனா வைரஸ் பரவல் உலகலாவிய நெருக்கடியாக மாறியிருக்கும் நிலையில், இலங்கைக்கு இந்த நிதியுதவியை வழங்குவதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு வெளிப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த நிதியுதவியின் மூலம் தொற்றுக்கு உள்ளானவர்களைக் கண்டறிதல், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தல், சுகாதார சேவையாளர்களுக்கான பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தல் ஆகியவற்றைச் செய்யமுடியும் என்றும் அமெரிக்கத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.