கொழும்பின் பல இடங்களில் முடக்கம் தொடர்ந்தும் அமுலில் இருக்க காரணம் என்ன?

0

முடக்கப்பட்டுள்ள கொழும்பின் பல இடங்களில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை சுகாதார அதிகாரிகள் நிறைவு செய்யவில்லை என்றும் அப்பகுதிகளில் அதிக கொரோனா துணைக் கொத்து பெருக்கம் காணப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதன் காரணமாகவே குறித்த பகுதிகள் நீண்ட காலத்திற்கு தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்தோடு அந்த பகுதிகளிலிருந்து கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்ந்தும் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில், குறிப்பாக கொழும்பில் வசிக்கும் மக்கள் சுகாதார நடைமுறைகளையும் ஒழுங்குமுறைகளையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை கடந்த 24 மணி நேரத்திற்குள் முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவழி கடைபிடிக்க தவறிய 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்தோடு இன்றுவரை தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறியதற்காக மொத்தம் 2 ஆயிரத்து 98 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.