கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்ட பொலிஸ் பிரிவுகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகள் அபாயமுடையவை என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த பிரதேசங்களில் இனங்காணப்படாத தொற்றாளர்கள் இருக்கக் கூடும் என்பதன் காரணமாகவே அவை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என அந்தப் பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், மருதானை, கோட்டை, புறக்கோட்டை, கொம்பனி வீதி மற்றும் டாம் வீதி ஆகிய தனிமைப்படுத்தப்பட்டுள்ள இந்த பகுதிகள் அபாயமுடையவையாகும்.
இங்கு இனங்காணப்படாத தொற்றாளர்கள் இருக்கக் கூடும். எனினும் தொற்று வெளிப்படுவதற்கு சிறிது காலம் எடுக்கும். குறிப்பிட்ட காலத்தின் பின்னர் தொற்றாளர்கள் இனங்காணப்படக் கூடும்
எனவே குறித்த பிரதேசங்களில் இருந்து ஏனைய பகுதிகளுக்கு தொற்று பரவக்கூடாது என்பதற்காகவே அவை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இப்பகுதிகளில் அத்தியாவசிய தேவைக்கான சேவைகள் தடையின்றி முன்னெடுக்கப்படும். இவ்வாறான சேவைகளில் ஈடுபடுபவர்கள் அடிப்படை சுகாதார வசதிகளைப் பின்பற்ற வேண்டும்.
மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் உருவாகிய கொத்தணி தற்போது கட்டம் கட்டமாக குறைவடைந்து வருகிறது.
பேலியகொடை கொத்தணி பாரிய கொத்தணியாக உருவாகியது. இதனுடன் தொடர்புடைய தொற்றாளர்கள் நாடளாவிய ரீதியிலும் இனங்காணப்பட்டனர்.
கொழும்பு மாநகரசபை மற்றும் கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளைத் தவிர ஏனைய பகுதிகளில் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகும்.
தற்போது முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்தால் மிக விரைவில் கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகின்றோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.