கொழும்பில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

0

கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம்(வியாழக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 538 பேரில், 304 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்திற்கு உட்பட்ட பொறளை பகுதியில் 254 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், மட்டக்குளி பகுதியில் 11 பேருக்கும், கொள்ளுபிட்டி, கிருலப்பனை மற்றும் பன்னிபிட்டி ஆகிய பிரதேசங்களில் தலா 4 பேருக்கும் நேற்றையதினம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், கொம்பனி வீதி, கருவாத்தோட்டம், கிரேண்பாஸ் கொட்டாஞ்சேனை, புளுமென்டல், மருதானை, தெமட்டகொடை, புறக்கோட்டை, பேலியகொடை, மொரட்டுவை மற்றும் ஒருகொடவத்தை ஆகிய பிரதேசங்களிலும் கொரோனா தொற்றாளர்கள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில், கொழும்பு மாவட்டத்தில் இதுவரையான காலப்பகுதியில் 13 ஆயிரத்து 265 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.