கொழும்பு, கம்பஹா மாவட்டங்களை தவிர 23 மாவட்டங்களில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு!

0

கொரோனா அச்சத்தை அடுத்து நாடளாவிய ரீதியாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கொழும்பு, கம்பஹா மாவட்டங்களை தவிர, 23 மாவட்டங்களில் தளர்த்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்ட அச்சத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை படிமுறை படிமுறையாக தளர்த்தி பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் கடந்த வாரம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எனினும், நேற்று ஞாயிற்றுக்கிழமை முழு நேர தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாடு முழுதும் அமுல்ப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போதும் முழு நேர ஊரடங்கு நிலைமையின் கீழ் உள்ள கொழும்பு, கம்பஹா மாவட்டங்கள் தவிர ஏனைய 23 மாவட்டங்களிலும் நேற்று அமுல் செய்யப்பட்ட ஊரடங்கு நிலைமை இன்று காலை இலங்கை நேரப்படி 5.00 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இவ்வாரம் முழுதும் ஒவ்வொரு நாளும் இரவு 8.00 மணி முதல் மறுநாள் காலை 5.00 மணி வரையில் 9 மணி நேர தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல் செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் அமுலில் உள்ள முழு நேர ஊரடங்கு நிலைமை மறு அறிவித்தல் வரை தொடரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கு காலப்பகுதியிலோ அல்லது அது தளர்த்தப்படும் போதோ தனிமைப்படுத்தல் சட்ட நியதிகளுக்கு அப்பால் சென்று செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கூறினார்.

இதற்கான  அதிகாரம் பொலிஸாருக்கு  வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.