கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு நிறுவன மற்றும் தனிப்பட்ட வகையில் அதிக பங்களிப்பு

0

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தை பலப்படுத்துவதற்கு நிறுவன மற்றும் தனிப்பட்ட நன்கொடையாளர்கள் பெருமளவு பங்களிப்பு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொவிட் 19 என்னும் கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை கட்டுப்படுத்தல் மற்றும் அதனுடன் இணைந்த சமூக பணிகளை இலகுபடுத்துவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்  சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியம் கடந்த 23ஆம் திகதி தாபிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து இந்நிதியத்திற்காக 100 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது.

கண்டி தளதா மாளிகையின் நம்பிக்கை நிதியத்தின் மூலம் 10 மில்லியன் ரூபாயும், மல்வத்தை மற்றும் அஸ்கிரிய விகாரைகளினால் 10 மில்லியன் ரூபாயும் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை நிறுவாக சேவை சங்கம் 2.5 மில்லியன் ரூபாயினையும், ஜனாதிபதி அலுவலகம் 02 லட்சம் ரூபாயினையும், இலங்கை பொறியியலாளர் சேவை சங்கம் 6.5 மில்லியன் ரூபாயினையும், கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் 2.5 மில்லியன் ரூபாயினையும், அரச சேவை பொறியியல் சங்கம் 03 மில்லியன் ரூபாயினையும், இலங்கை பொறியியலாளர் நிறுவனம் ஒரு மில்லியன் ரூபாயினையும், கிரிக்கட் வீரர் முத்தையா முரளீதரன் 05 மில்லியன் ரூபாயினையும் சேர்த்து இது வரை 140 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு நிதியத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

இலங்கை வங்கியின் நிறுவனக் கிளையின் 85737373 என்ற இலக்கமுடைய விசேட கணக்கிற்கு அன்பளிப்புகள் வரவு வைக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு வெளிநாட்டு நன்கொடையாளர்களும் இக்கணக்கிற்கு பங்களிப்புச் செய்துள்ளனர்.

சட்டபூர்வமான கணக்கின் மூலம் நிதியத்திற்கு செய்யப்படும் அன்பளிப்புகள் வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும். காசோலை, டெலிகிராப் ஊடாக நிதியினை வைப்பிலிட முடியும்.

‘சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின்’ முகாமைத்துவம் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் நிதி மற்றும் வங்கித் துறையின் உயர் திறன்களுடன் தொழில்வல்லுனர்களைக் கொண்ட பணிக்குழாம் ஒன்றின் மூலம் மேற்கொள்ளப்படும்.

அமைச்சுக்களின் செயலாளர்கள், சுகாதார பணிப்பாளர் நாயகம், கணக்காய்வு நிபுணர்கள் மற்றும் வங்கித் தலைவர்கள் முகாமைத்துவ சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய, சர்வதேச நிறுவனங்களும் நிதியத்திற்கு பங்களிப்பதன் மூலம் சுகாதார, சமூக பாதுகாப்பை வலுப்படுத்த பங்காளர்களாவதற்கும் மனிதாபிமான பணியின் மூலம் அனைத்து பிரஜைகளையும் கவனிக்கவும் கிடைத்த விசேட சந்தர்ப்பமாகும் என ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி ஜயசுந்தர நம்பிக்கை தெரிவித்துள்ளார்.