கோப் குழுவின் செயற்பாடுகள் இன்று ஆரம்பம்

0

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவான கோப் குழுவின் செயற்பாடுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ளன.

அதற்கமைய இன்று முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை 5 நாட்கள் கோப் குழு கூடவுள்ளதாக அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

வரையறுக்கப்பட்ட ‘லங்கா கோல் கம்பனி பிரைவட் லிமிடெட்’ கோப் குழுவின் முன்னிலையில் முதலாவதாக அழைக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2009ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு ஜுன் மாதம் வரை, நுரைச்சோலை மின்நிலையத்துக்காக லங்கா கோல் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி கொள்முதல் தொடர்பாக கணக்காய்வாளர் நாயகத்தினால் முன்வைக்கப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அதன் அதிகாரிகள் இன்று கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், லக்விஜய மின்நிலையத்தின் முக்கியத்துவம் மற்றும் அதனால் ஏற்படுகின்ற சூழல் பாதிப்புக்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் குறித்து எதிர்வரும் 8ஆம் திகதி கோப் குழுவில் கலந்துரையாடுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் சாத்தியக்கூற்று ஆய்வு மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பில் விசேட கணக்காய்வு அறிக்கையும் பரிசீலிக்கப்படவுள்ள நிலையில், வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் குறிப்பிட்ட வேலைத்திட்டத்தின் முகாமைத்துவப் பிரிவும் எதிர்வரும் 20ஆம் திகதி கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் களனி கங்கையில் நீர் மாசடைந்தமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சூழல் கணக்காய்வு அறிக்கை குறித்துக் கலந்துரையாடுவதற்கு நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, இலங்கை முதலீட்டுச் சபை, மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் ஆகியனவும் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, 9ஆவது நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் 9ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இன்றைய தினம், நிதி திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் என்பன சபையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.