கோவிட் அபாய வலயங்கள் தொடர்பான தகவலை உடனே அரசு வெளியிட வேண்டும்! – மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை

0

இலங்கையில் கோவிட் பரவல் அதிகரித்துள்ள ஆபத்தான வலயங்கள் அடையாளப்படுத்தப்பட்ட வரைபடங்களை தொற்று நோயியல் பிரிவு உடனடியாக வெளியிட வேண்டும் என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதன் ஊடாக மக்கள் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள முடியும் எனவும், ஆபத்து அதிகமான பிரதேசங்களுக்குச் செல்லும் போது மக்கள் மேலும் அவதானமாகச் செயற்பட கூடியதாக இருக்கும் எனவும் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே இன்று ஊடகங்களிடம் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டை முடக்குவதற்கான திட்டம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ள போதிலும், அதிகரித்து வரும் கோவிட் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த கடுமையான தனிமைப்படுத்தல் விதிமுறைகளை அமுல்படுத்துவது அவசியமாகும்.

நாட்டில் இதுவரை கோவிட் பரவலில் தீவிரமான அதிகரிப்பு பதிவாகவில்லை. எனினும், நிலைமையைக் குறைத்து மதிப்பிட முடியாது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினால் வைரஸ் பரவுவதைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

இந்தநிலையில், கோவிட் பரிசோதனைகளை அதிகரித்துத் தொற்றாளர்களை இனங்காண்பது முக்கியமானது. அத்தோடு அவசர சிகிச்சை பிரிவுகள் கோவிட் நோயாளர்களுக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும்.

ஏனைய நோயாளர்களைக் கோவிட் நோயாளர்களுடன் இணைத்து சிகிச்சை வழங்க முடியாது. அதேநேரம், அவசர சிகிச்சைப் பிரிவுகளில் படுக்கைகளை அதிகரிக்கவும் தொற்றுநோயியல் பிரிவு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.