சுகாதார ஆலோசனையைப் பின்பற்றாத நபர்கள் மீது வலுவான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்ட அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,
“தற்போது நாட்டிற்குள் வழங்கப்படும் தடுப்பூசிகள் கோவிட் -19 வைரஸின் புதிய மாறுபாட்டை கட்டுப்படுத்த முடியும். தடுப்பூசி திட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஒக்ஸ்போர்டு – அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஸ்பூட்னிக் வி உள்ளிட்ட அனைத்து தடுப்பூசிகளும் வைரஸின் புதிய அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், சுகாதார வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். சுகாதார ஆலோசனையைப் பின்பற்றாத நபர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மேலும், யாழ்ப்பாணத்தில் தேர் திருவிழா மற்றும் நுவரெலியாவில் வசந்த கால கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்து நடத்திய நபர்கள் சட்டத்தால் கடுமையாக கையாளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஒவ்வொரு நபரும் சுகாதார ஆலோசனையைப் பின்பற்றி, வரவிருக்கும் மூன்று வாரங்களில் தங்கள் வீடுகளில் தங்கியிருந்து செயற்பட்டால் மூன்றாவது அலையின் பரவலை கட்டுப்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.