சட்டங்கள் மூலம் முஸ்லிம்களை அடிமைப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சி- ரவூப் ஹக்கீம்

0

கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பாக நாங்கள் கதைக்கும் விடயங்கள் அரசாங்கத்தின் காதுகளுக்குள் செல்வதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அத்துடன். தாங்கள் அமுல்படுத்துகின்ற சட்டங்களுக்கு முஸ்லிம்கள் அடிமைகளாக இருக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் செயற்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பாக ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “அரசியல்வாதிகள் மட்டுமல்லாது மருத்துவத் துறையிலுள்ள சிரேஷ்ட பேராசிரியர்கள் அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்கள். உலக சுகாதார ஸ்தாபனம் என்ன கூறினாலும், நாங்கள் எங்கள் தீர்மானத்தை மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் உள்ளது.

வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடலிலிருந்து வேறொரு நபருக்கு பரவும் அபாயம் உள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால், உலக சுகாதார ஸ்தாபனம் உட்பட அனைத்து தரப்பினரும் உயிரிழந்த சடலத்தில் வைரஸால் வாழமுடியாது எனக் கூறுகின்றனர். உயிர் வாழ்கின்ற உடலிலேயே வைரஸ் உயிர்வாழும். பக்ரீறியாக்களுக்கு மாத்திரமே சடலத்தில் வாழமுடியும். இதனை அனைவரும் ஏற்றுக்கொள்கின்றார்கள்.

உலக சுகாதார ஸ்தானம் சடலத்தைப் புதைப்பதற்கு சில கட்டுப்பாடுகளை மாத்திரமே விதித்துள்ளது. உலகிலுள்ள நூற்றுக்கணக்காக நாடுகள் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளை ஏற்றுச் செயற்படுகின்றன. ஆனால், இலங்கை மாத்திரமே சடலத்தை எரிக்கின்றது. தங்களுக்கென ஒரு சட்டத்தை உருவாக்கிக்கொண்டு பின்பற்றுகின்றனர்.

முஸ்லிம்களைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக இதனை அரசாங்கம் செய்கின்றது. இதில் கட்டாயம் உள்நோக்கம் இருக்கின்றது. தாங்கள் அமுல்படுத்துகின்ற சட்டங்களுக்கு முஸ்லிம்கள் அடிமைகளாக இருக்கவேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு. முஸ்லிம்களைத் தண்டிக்கும் ஒரு செயற்பாடு. சர்வாதிகார முறையில் இந்த விடயத்தை அரசாங்கம் செய்து வருகின்றது.

இதற்காக நாங்கள் சட்டத்துறையை நாடமுடியும். பாதிக்கப்பட்ட தரப்பினர் நீதிமன்றத்தை நாடமுடியும். நீதிமன்றத்தை நாடினாலும், பல மாதங்கள் இந்த வழக்கு தொடரும். அவசரமாக தலையீடு செய்யவேண்டும் என நீதிமன்றத்திடம் கேட்கலாம். பேச்சுவார்த்தை மூலம் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மாற்றலாம் என்ற எண்ணத்திலேயே நாங்கள் முயற்சித்தோம். நாங்கள் இதுவரை நீதிமன்றத்தை நாடவில்லை.

ஆனால், இறந்த 7 பேரில் 3 பேர் முஸ்லிம்கள். 3 பேரையும் எரித்துவிட்டார்கள். இந்த விடயம் மிக மோசமாக முஸ்லிம் மக்களின் மனங்களைப் பாதித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக நீதித்துறையை நாடுவதற்கான எண்ணங்களும் உள்ளன.

அரசாங்கத்தை இணக்கப்பாட்டுக்குக் கொண்டு வரலாம் என்ற முயற்சிதான் நடந்து கொண்டிருக்கின்றது. புதைக்கலாம் என அரசாங்கம் கூறினால், நாட்டிலுள்ள 20 மில்லியன் பௌத்த மக்களும் வீதிக்கு இறங்கி போராடுவார்கள் என்ற கதையை இப்போது வெளியிட்டுள்ளனர். இவர்கள் நினைப்பதுதானே சட்டம்.

முல்லைத்தீவில், ஒருவரை கோயில் வளாகத்தில் புதைக்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், பௌத்த பிக்குகள் சிலர் அங்கு சென்று நீதிமன்ற சட்டத்தை மீறி பலவந்தமாக அதைச் செய்தார்கள். தமக்குத் தேவையான விதத்தில் மக்களைத் தூண்டிவிட்டு, குளிர்காயும் அரசாங்கம் ஒன்றே தற்போது நாட்டில் உள்ளது. அச்சுறுத்தல் பாணியிலேயே அனைத்து விடயங்களும் நடக்கின்றன” என்று குறிப்பிட்டார்.